என் பேனாமுனை நறுக்கியவை சில
காசுக்குள்
காந்தி காவல்
காந்தியம்
காசுக்கு ஏவல்
ஓட்டுக்கு
வந்த நோட்டு
வாய்க்கு வந்த அரிசி
அலசிப் பார்
அரசியல் தெரியும்
அடுத்த ஜென்மத்திலாவது
பணக்கார நாய்களாக பிறக்க
தெருவோர நாய்கள் பிரார்த்தனை
அடுத்த ஜென்மத்திலாவது
என் மகன் வீட்டு நாயாக பிறக்க
முதியோர் இல்லத்தில்
தாயின் பிரார்த்தனை
நாய் ஜென்மங்களே நல்ல
ஜென்மம் போலும்
தர்மாஸ்பத்திரியில்
உயிர் கொலைகள் மட்டுமே
தர்மமாய்
எமதர்மனின் தர்மச் சத்திரம் இது
எக்கச் சக்கமாய் இருப்பதே
இன்று எதார்த்தமாய் இருப்பது
வாயில்லை
வடைமாலை உனக்கு
வாயுண்டு
வாய்க்கு உணவில்லை எனக்கு
- கோயில் வாசலில் பிச்சை கேட்பவன்
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்
கடவுளே
மனித மனங்களில் நீ இருப்பதில்லையோ?
பிணங்கள் உனக்கு அருவருப்போ?
விட்டு விடுதலையாகி நிற்பாய்
அரசியல் கட்சிகள் போல்
குட்டப் பாவாடைக்குள்
கட்டுக்கோப்பாய் பெண்ணியம்
கட்டுப்பாடற்றவன் யார்?
குட்டையை நெட்டையாக்கி பாராதவன்
கச்சத்தீவில் மீன்பிடிக்க
உரிமை இல்லை
வீட்டில் மீன் வளர்க்க
உரிமை உண்டா?
உச்ச நீதிமன்றம் என்ன
தீர்ப்பு சொல்லும்?
தேன் நிலவை
வான் நிலவில் கொண்டாடியது
வறுமை
விதவைத் தாள்
புதுமை செய்தால்
திருமணம் இன்று
இரு மனங்களுக்கு அல்ல
இருவீட்டு பணங்களுக்கு
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
அருகில் தோழியும் நோக்கினால்
நோக்குதலில் ஓட்டப் பந்தயம்
முதலில் தொட்டவர் யார்?
நல்விருந்து நடப்பது
உணவகங்களில் மட்டும்
உறைவிடங்களில் அல்ல
உபச்சாரம்
அபச்சாரமாம்
எதுவரை உறவு?
கதவுவரை மட்டுமே
எதுவரை பிள்ளை?
திருமணம் வரை மட்டுமே
கடைசிவரை யாரோ?
முடியும் வரை நீயே