கண்ணீர் கசியும் சிற்றேரி

கசடாகிக் கவலையுற்ற
முகத்தோடு கலங்கிச்
சலனமற்றுக் கிடக்கிறேன் !

உபயோகமற்றதாய் நீயுணரும்
உனது தினவுகளின்
கழிவுகளையென்னில்
அரவமற்று
விட்டெறிந்து செல்கிறாய் !

உனது வன்செயல்களுக்கான
ஆட்சேபனைகளாக
மிகுந்த பரிச்சயமுள்ள
எனது மேற்பரப்பில்
புறவெளிப் பயன்பாட்டினனைத்து
அசுத்தங்களையும்
என்னில் கழுவிக் கரைத்து
உன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறாய் !

ஆறாகயிருந்தால்
கோடையிலெனது மணலள்ளிச்
சென்றிருப்பாய்
நானோ ஏரியாகிப் போனதால்
கடைசிப் போர்வீரனும்
இரத்தச் சகதியில்
கிடப்பது போல்
கசடுதேங்கிக் கிடக்குமென்
வயிற்றின் வெடிப்புகளில்
மரித்தும் செரிக்காத
பேரழிவு நெகிழிகளை
கொண்டு வந்து குவிக்கிறாய் !

ஞாபகத்தின் அமிழ்தங்களில்
மூழ்கிக் கிடக்குமெனது
அடிக்கருனைக் கசிவுகளின்
சுரத்தலிலிருந்து
முன்பொருநாள்
இவ்வூர் பெருங்கோவிலின்
திருச்சிலைக் குளிப்பாட்டக்
குட நீர் மொண்டு
சென்றிருப்பதறியாது
உனது எச்சியினால்
என்னில்
காரி உமிழ்கிறாய் !

நானொன்றும் உனது
அசுத்தங்களை
அடித்துச் சென்று
கடல் சேர்க்கும் ஆறல்ல !

நீ விட்டெறியுமுனது
அசிங்கத்தின் கழிவுகளை
தொலைத்துவிடாது பாதுகாத்து
உன்னை நோக்கித்
தேங்கி நிற்குமொரு ஏரி !

என் சிறு ஊற்றின்
சுனைக் கண்களில்
கசிந்து வரும் நீரூற்றின்
பிறவிப் பயன் நீயறியமாட்டாய் -
கொடும்கோடையில்
நாக்கு தொங்க
நீரருந்த மண்டியிடும்
கால்நடையறியும்
தாகம் தீர்க்குமெனது
தவப்பயன் ...

பாட்டில் நீரருந்தும்,
அதிமானுடன்
நீயறிய மாட்டாய்
" நீரின்றி அமையாது உலகென்பதை ".

எழுதியவர் : பாலா (7-Jul-14, 1:13 pm)
பார்வை : 155

மேலே