அவள் அப்படித்தான்

"அம்மா !வந்துட்டேன் .."என்று ஓடி வந்த ராகுலைக் கட்டிக் கொண்டாள் சுகுணா..

"என்னடா கண்ணா ஸ்கூல் விட்டு வந்துட்டியா?"
"ஓ!"
"அம்மா !அம்மா!! "
"என்னடா ?"என்று கேட்ட சுகுணாவிடம்

"இன்னைக்கு ஸ்கூல்ல எங்க மிஸ் கதை சொன்னாங்கம்மா .."

"என்ன கதை சொன்னாங்க ?"என்றபடியே கையிலிருந்த பால் தம்ளரை ராகுலிடம் தந்தார் மரகதம்..
இவர் ராகுலின் பாட்டி..

"அனிமல்ஸ் பத்தின ஸ்டோரி பாட்டிமா "

"ஏம்மா சிங்கம் பார்க்க பயமா இருக்குமாமா ?"என்று கேட்ட மகனை அணைத்துக் கொண்டு

"ஆமாம்பா..ஏன்னா அது காட்டுக்கே ராஜா இல்லையா ?அதப் பார்த்து மற்ற விலங்குகள் பயப்படும்.."

"அம்மா ,நான் சிங்கத்தை பார்க்கணுமே !"

"சரிடா தங்கம்.."

"புலி ,குரங்கு ,மான் ,முயல் ...அப்புறம் யானை ,ஒட்டகச்சிவிங்கி எல்லாமே பார்க்க ஆசையாய் இருக்கும்மா !"

"கண்டிப்பா நாம அடுத்த வாரம் சண்டே ஜூக்கு போலாம் சரியா ?"என்ற தாயின் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பரிசாய்த் தந்துவிட்டு வெளியில் விளையாட ஓடிவிட்டான் ராகுல் ..

"பார்த்து மெதுவாப் போப்பா !!"என்று இங்கிருந்தே சத்தமாய்க் கூறினாள் சுகுணா..

"சுகுணா வர்ற சண்டே அவங்க வரேன்னு சொன்னாங்களேம்மா..."என்று இழுத்தார் மரகதம்..

"யாரும்மா ?"என்ற சுகுணாவிடம்

"ராகுலோட அப்பாதான்!"

சுகுணா பதில் பேசவில்லை ..
3 வருடத்திற்கு முன்னால் ராகுலின் அப்பா சதீஷிடம் சண்டையிட்டு விட்டு பிறந்தகம் வந்துவிட்டாள் சுகுணா ..

எல்லாம் வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்திற்காக மரகத்தின் பெயரிலிருந்த வீட்டை விற்றுத் தரும்படி சதீஷ் சொன்னதால்தான்..

'எங்க அப்பா வாழ்ந்த வீட்டை விட்டுட்டு அம்மாவால் வர முடியாதுங்க' என்ற சுகுணாவின் பேச்சால் கோபமுற்ற சதீஷ்
"வேறு வழியில்லையே!படித்த பெண் என்று வரதட்சணை வாங்காததால் தான் இத்தனை கஷ்டம் "என்று கூறியவனிடம்

"ஓ அப்படியா !அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ?"என்ற பதில் கேள்வி கேட்ட சுகுணாவிற்கும் சதீசிற்கும் வாக்குவாதம் முற்றி தன் தாய் வீடு வந்துவிட்டாள் சுகுணா..

தன் அம்மா வீட்டிலிருந்தே அலுவலகம் சென்று வந்தாள் சுகுணா..
அடுத்தடுத்த வியாபார நஷ்டங்கள் ,இழப்புகள் இவற்றை சரி செய்ய முயன்ற சதீஷ் தன் குடும்பத்தை கவனிக்க மறந்தான்..

சின்ன சண்டைதானே திரும்ப வந்துவிடுவாள் என்று அவன் நினைத்தது போல் அல்லாமல் சுகுணா வரவில்லை..ராகுல் அப்போது கைக்குழந்தை ..இடையிடையே தன் மகனை சென்று பார்த்தாலும் சுகுணா முகம் கொடுத்துப் பேசுவதில்லை ..

தானே தன் வீட்டை எழுதித் தருவதாக மரகதம் ஒருமுறை நேரில் சென்று தன் மருமகனிடம் சொன்னபோதும் மறுத்துவிட்டான் சதீஷ்..

இப்போது 3 வருடங்கள் கழித்து தன் மகனையும் மனைவியையும் சமாதானப் படுத்தி அழைத்துச் செல்ல முயற்சிக்கிறான் சதீஷ் ..

அதற்காகத்தான் வருகிற ஞாயிறு வருவதாய்ச் சொல்லி இருந்தான் ..

"சுகுணா!எவ்வளவு நாள் கழித்து உனக்கு ஒரு நல்ல நேரம் வருது ..இன்னொரு நாள் ராகுலுடன் வெளியில் போய்க்கலாம் "என்ற அம்மாவிடம்

"இல்லைம்மா ..கண்டிப்பாக வெளியில் போறோம்.."

"நான் சொன்ன என்ன கேக்கவா போற ?"

"அம்மா !நான் இவ்வளவு நாளாக அவருடன் போகாததற்கு ஒரு காரணம் இருக்கும்மா..நீ அன்று வீட்டை வித்துக் கொடுத்திருந்தா அவருக்கு கஷ்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..கஷ்டம் வந்தா யாராவது கைகொடுப்பாங்கனு அவருக்குள்ள நினைப்பு வந்திடும்..இப்ப அவருக்குள்ள தன்னம்பிக்கை வந்துடுச்சும்மா..அவர் நல்லவருதாம்மா .."என்றாள் சுகுணா..

"அதெல்லாம் சரி..அப்போ ஞாயிறு நீங்க அவர்கூட இருக்கலாமே .."என்ற அம்மாவிடம்

"இப்போதாம்மா அவருக்கு பணம் வாழ்க்கையில் அவசியம்தான்..ஆனால் அதுவே எல்லாம் எல்லாம் ஆகிவிடாதுன்னு தெரிஞ்சிருக்கு.."என்ற சுகுணாவைப் பார்த்து

"அதுக்கு ?"என்ற மரகதத்திடம்

"உண்மையான பாசம் எங்க மேல இருந்தா அவர் இதைத் தப்பாக எடுத்துக்க மாட்டார்மா..இவ்வளவு நாள் கழித்து எங்க மேல் அக்கறைகொண்டு வருபவர் தன் மகனுடைய ஆசையை எதிர்க்க மாட்டருன்னு நான் நம்பறேன்..பாசம் பித்துக் கொள்ளச் செய்யும்மா..அவரை அடுத்த வாரம் வரச்சொல்லிடுங்க "என்ற சுகுணாவைப் பார்த்து வியந்து நின்றார் மரகதம்..

அவள் அப்படித்தான்!!

எழுதியவர் : கார்த்திகா AK (7-Jul-14, 9:35 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 257

மேலே