நெஞ்சில் தைத்த முள்
இரவு மணி 8.30 நெருங்கிக் கொண்டிருந்தது, சரவணன் தனது இருசக்கர வாகனத்தை வீட்டைநோக்கி விரட்டிக்கொண்டிருந்தான்.
வழியில் ஏதோ ஊர்வலம்போல, சாலையில் தடைவைத்து எல்லா வாகனங்களையும் ஒரு குறுகியவழியில் திருப்பிவிட்டிருந்தார்கள். நெரிசலில் புகையும், ஒலியும் உடலைதுளைக்க, வாகனத்தை உருட்டியும், விரட்டியும் செல்ல வேண்டியிருந்தது. குறுக்கே வந்த மிதிவண்டிக்காரனை திட்டிக்கொண்டே வந்தவனுக்கு, முன்னால் சென்ற பேருந்து சட்டென திரும்பி வளைந்து நின்றதும், வண்டியை கட்டுப்படுத்த முடியாமல், பேருந்தின் பின்னால் இடித்து, வண்டியின் முன்பக்க விளக்கும், ஒரு பக்கத்து சைகை விளக்கும் உடைந்து, கீழே வண்டியோடு சரிந்தான். அவனுக்கு கையில் சிராய்ப்பு ஏற்பட்டது, சாமாளித்து, எழுந்து, வண்டியை ஓரம்கட்டி வேறு ஏதெனும் உடைந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பெருமூச்சுவிட்டபடி நின்றான்.
போனமாதம்தான் வண்டிக்கான கடன் முடிந்தது. அதற்குள் இப்படி ஒரு செலவா? என எண்ணி நொந்தவாரே, அருகில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு தம் வாங்கி பற்றவைத்தான், வாய்வழியே புகையை உருஞ்சி நெஞ்சக்கூட்டை புகைய விட்டான். மூன்று, நாங்கு இழுப்புக்குப் பிறகே மனது கொஞ்சம் இலேசானது. வாடை மறைக்க வாயில் ஒரு வாசனை மிட்டாயை போட்டுக்கொண்டான். பின் மெதுவாக வண்டியை எடுத்துக்கொண்டு, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான் சரவணன். வாசலில் வண்டிசத்தம் கேட்டு, வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த கீதா ஓடிவந்தாள். "ஹை! அப்பா வந்தாச்சி!" என்று, சரவணனின் இடுப்பை கட்டிக்கொண்டு நின்றாள். சரவணனின் கைகளில் இரத்த திட்டுக்களை கண்டதும்,
அய்யோ! அப்பா இரத்தம்!.. என அலறிக்கொண்டே உள்ளே அம்மாவிடம் ஓடினாள். தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த ராஜூவும் சத்தம் கேட்டு, விழித்து புரண்டான். அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்த சுதா, என்னவோ ஏதோவென்று பதறியபடி வந்து, "என்னங்க, என்னாச்சுங்க!" என்று ஓடிவந்தவள், அவனின் கையை எடுத்து பார்த்தாள், சிறு சிராய்ப்புதான் என்றதும், கொஞ்சம் நிம்மதியானாள்.
சரவணன் நடந்தவைகளை தொடர்ச்சியாக, செல்லிமுடித்தான். என்னங்க நீங்க! ஜாக்கரதையா வரக்கூடாதா? என திட்டலும், வருத்தமும் கலந்து கேட்டவாறு, கைக்கு எண்ணெய் தடவிவிட்டாள் சுதா. சிறிது நேரம் சென்றதும், எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். தொலைக்காட்சியில் விளம்பரம் தொடர்ந்தது. புகைப்பதன் விளைவுகளும், அதனால் பாதிப்படைந்தவர்கள் பற்றியும் அரசின் விளம்பரம் போய்கொண்டிருந்தது. இதனை பார்த்த சுதா, உணர்ச்சியானவளாய், பாருங்க! நல்லா பாத்துக்கோங்க... என்று சரவணனிடம் சொன்னாள். இதைகேட்டவுடன் கீதா, கோபமாக அம்மாவிடம், "என்னமா! எங்க அப்பாவ பாத்து இப்டி சொல்ற! எங்க அப்பா என்ன தம் அடிக்கிறாரா?" என்றாள்.
சரவணனுக்கு, நெஞ்சில் சுருக்கென்று முள்தைத்ததுபோல் இருந்தது. இவள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்!
இப்படி, இவளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதுபோல, தினமும் பலமுறை புகைக்கிறோமே! என மனது வருந்தி திக்கித்து நின்றான்.
இனி, எப்போதெல்லாம் சரவணன் கையில் 'தம்' எடுக்கிறானோ அப்போதெல்லாம் நெஞ்சில் சுருக்கென்று, அவன் மகளின் நம்பிக்கை குத்திக்கொண்டேயிருக்கும்.