அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர‌

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர‌

நாம் ஒவ்வொருவரும் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை அது கண்டிப்பாக அரசாங்க வேலையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் பள்ளி என்று வந்து விட்டால் தனியார் பள்ளிகளைத்தானே தேடி ஓடுகின்றோம். அது ஏன்?

நம்மில் பலர் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் தான். அதை விட்டுவிட்டு தனியார் பள்ளி தேடி நம் பிள்ளைகளுக்கு நாமே போகிறோம். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து, அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க முன் வந்தோமானால் நிச்சயமாக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையில் முன்னிலை பெறும்.

அரசுப் பள்ளிகளில் நான் அப்பொழுது வாங்கிய அதே பள்ளிக்கட்டணம் தான் வாங்குவேன் என்ற திட்டத்தைவிட்டு கொஞ்சம் உயர்த்தி கேட்கலாம். அதை வைத்து பள்ளியைச் சீரமைக்கலாம்.

சுகாதாரத்தில் நாம் முதலிடம் தருவது கழிப்பறைக்கு. அந்த கழிப்பறையை எண்ணிக்கையில் அதிகமாக்கலாம்.

ஒவ்வொரு ஆசிரியரும் அருகில் இருக்கும் ஊர்களுக்கு சென்று, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பிள்ளைகள் அவர்கள் படிக்கிறார்களா இல்லையா என்ற விபரம் சேகரித்து பள்ளியில் சேர்க்க முன்வரலாம்.

கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகு தனியார் பள்ளிகள் அனைத்தும் விழிப்புடன் செயல்படுகிறார்கள். இதேபோல் அரசுப்பள்ளியும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி விழிப்புடன் செயல்படலாம்.

பிள்ளைகளுக்கு சுகாதாரமான குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்கலாம்.

வருடம் ஒருமுறை சுற்றுலா செல்வது பற்றி கேட்கலாம்.

விளையாட்டு மைதானங்களில் குழந்தைகளுக்கு விளையாட அனைத்து வசதிகளும் செய்து மேம்படுத்தி கொடுத்தோமானால் நிச்சயம் அரசுப்பள்ளியும் மக்கள் மத்தியில் மதிப்பில் உயரும்.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை 3 வயதிலேயே தள்ளி விடுகிறோம்.ஆனால் அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. இப்போதும் அதே 5 வயதில் தான் சேர்க்கிறார்கள். இதை கொஞ்சம் மாற்றலாம்.

அரசுப்பள்ளியில் ஒவ்வொருவருக்கும் தனி மேஜை நாற்காலி திட்டத்தை
கொண்டுவரலாம்.

இசை, நடனம், நீச்சல் போன்ற பல பயிற்சிகளை கொண்டு வரலாம்.

பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை மாற்றலாம்.

செயல்வழிக்கற்றல் முறையை கொண்டுவரலாம். உதாரணத்துக்கு ஒரு பையை காண்பித்து இதுதான் பை என்று சொல்லாமல், பேப்பர் பொருட்கள் வாங்கிவரச் சொல்லி பேப்பரில் செய்து காண்பித்து, மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை விவரிக்கலாம்.

மனப்பாடத்தை மையப்படுத்தாமல் குழந்தைகளுக்கு புரியும்படி விள‌க்கம் தரலாம்.

ஏதாவது ஒரு மாணவரின் மதிப்பெண் குறைந்தாலும், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, அனைவரையும் வெற்றி பெறச் செய்யலாம்.

அப்பொழுதெல்லாம் கணக்கில் நூறு மதிப்பெண் வாங்கும் புலிகள் யாருமில்லையே, பாஸ் ஆனால் போதும் என்ற நினைப்புதான் இருந்தது.
ஆனால் இப்பொழுது அப்படியா? 'அப்பப்பா!' நம் பிள்ளைகள் படிக்கிறார்களா அல்லது கரைத்து குடிக்கிறார்களா என்றே தெரியவில்லை. அப்படி போய் கொண்டிருக்கிறது படிப்பு.

தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளை மட்டும் அப்படி இல்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளும் நன்றாகத்தான் படிக்கிறார்கள். என்ன எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவாகி விட்டது.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளுக்கு சுற்றுச்சூழல் கல்வி, கணிணிப்பயிற்சி,
செயற்கை அணிகலன்கள் தயாரித்தல், யோகா, கராத்தே இதேபோல் நிறைய‌
கொண்டுவரலாம்.

ஆசிரியர் பணி என்பது மிகப்பெரிய வரம். ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகளுக்கு இன்னொரு தாய் ஆகிறார்கள். பிள்ளைகளை அழைத்து சென்று பள்ளியில் சேர்த்துவிட்டோம், 'அப்பாடா' என்று எத்தனை பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

இன்றைக்கு வளர்ந்து வரும் சூழலில் நல்ல தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
அதிகமான ஊதியங்கள் கொடுத்து வேலைக்கு அமர்த்துகிறார்கள் சில தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளில் நல்ல அனுபவமிக்க ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பள்ளி முன்னேற முயற்சிக்கலாம்.

இவ்வாறான பல முயற்சிகளை மேற்கொண்டோமானால் கண்டிப்பாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், தரமும் உயரும்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (7-Jul-14, 9:39 pm)
பார்வை : 431

சிறந்த கட்டுரைகள்

மேலே