அரசுபள்ளியில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர
அரசுபள்ளியில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர. ...
முன்னுரை
' கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக'
என்பது தெய்வப்புதல்வரின் வாய்மொழி.கல்வியின் பெருமை அறியாதோர் கண்ணில்லாதவர் ஆவர்.இன்றைய சூழலில்
கல்விக்காக நம்மவர்கள்
செலவிடும் பணம் ஏராளம்.கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பவர்கள் ஏராளம்.ஏன் அரசு பள்ளிகளை புறக்கணிக்கின்றனர் ? நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
அரசு பள்ளிகள்
தனியார் பள்ளியில் பயில்பவர்கள் மட்டும்தான் வாழ்வில்
சாதிக்கிறார்களா? வெற்றிப்படியை எட்டிப்பிடிக்கிறார்களா?அரசு பள்ளியில் பயில்பவர்கள் திறமை குறைந்தவர்களா?நிச்சயமாக இல்லை. அரசுபள்ளியில் பயின்ற எத்தனையோ மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகவும்
மருத்துவர்களாகவும் பணிபுரிகின்றனர்.
மனநிலையில் மாற்றம் தேவை
' எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கால் மட்டுமே மற்றொரு விளக்கை எரிய வைக்க முடியும். '
இதை உணர்ந்து அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல அணுகுமுறையோடு கற்றுத்தர வேண்டும். இன்றைய சூழலில் தேர்வின் மூலமே ஆசிரியர்கள் நியமனம் செய்ய படுகிறார்கள்.
நிச்சயமாக அவரகள்திறமையில் குறைந்தவர்கள் இல்லை. அவர்களால் நமது அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை அதிகப்படுத்த இயலும்.
அரசின் பணி
ஆசிரியர்கள் எத்தனை முயற்சிகள் செய்தாலும் அவர்களுக்கு ஆணிவேராய் இருக்க வேண்டியது அரசின் கடமை.பல பள்ளிகளில் ஆய்வறை வசதிகள் சரியாக இல்லை.இங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது மிகவும் அவதிபடுகிறார்கள்.
.எல்லா பள்ளிகளிலும் ஆய்வறை வசதி செய்து தரவேண்டியது அரசின் கடமை.
கருத்தரங்குகள்
ஒரு ஆசிரியர் சிறந்த மாணவனாக எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் சிறந்த ஆசானாய் இருக்க முடியும். ஆசிரியர்களின் பணித்திறனை அதிகப்படுத்த அரசு அவ்வப்போது
கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.
தரம் உயர்த்த வழிமுறைகள்
நம் நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வெறும் புத்தகபாடத்தை மட்டுமே மனனம் செய்யும் முறையை மாற்ற வேண்டும்.
நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். செய்து கற்றல் முறையை பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அதீத ஈடுபாடு உருவாகும்.மாணவர்களுக்கிடையில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அந்த போட்டிகள் அவர்களது கலைஆர்வத்தை, கற்பனை திறனை தூண்டுவதாக இருத்தல் நலம்.
மாணவர்களை புத்தகப்புழுக்களாக
ஆக்காமல் நமது கல்வி இருக்க வேண்டும்.
மாணவர்சேர்க்கை
நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர்சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.தங்களது கற்பிக்கும் திறனால் மாணவர்களை ஈர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவனின் நுண்ணறிவுத்திறனையும் ஆளுமைத் திறனையும் ஆசிரியர்கள் அறிந்து அதற்கேற்றவாறு கற்றல் செயல்முறைகளை அமைக்க வேண்டும். மாணவர்களை அவர்தம் நுண்ணறிவுத்திறனுக்கேட்ப மெதுவாக கற்பவர்கள் விரைவாக கற்பவர்கள் எனப் பிரித்து அவரவர்களுக்கு ஏற்ற முறையில் கல்வி திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.
முடிவுரை
சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்திய பின் எங்கும் ஒரே கல்வி என்ற நிலை உள்ளது.முதலில்
அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அவர்கள்தான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வேண்டும்.
' நம்பிக்கை நார் மட்டும்
நம்கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்களும்
ஒவ்வொன்றாய் ஒட்டிக் கொள்ளும்' என்ற கவிஞர் மேத்தாவின் வரிகளை மனதில் கொண்டு முயற்சி செய்வோம்.அரசு பள்ளியின் தரத்தை உயர்த்திடூவோம்....