அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர -- இராஜ்குமார்
அரசு பள்ளிகள் புறகணிக்கப்பட காரணம் :
தன் குழந்தையின் எதிர்காலம் சிறப்புடன் அமைய வேண்டும், அவன் நல்ல பணியில் அமர வேண்டும் என்ற பெற்றோரின் திட்டமிடல் மூலம் அக்குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவதால் , அரசு பள்ளிகள் ஒதுக்கப்படுகிறது.
தற்போதைய பலரின் எண்ணப்படி நல்ல சம்பளத்துடன் ஒரு நல்ல நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் .
இன்றைய நிலவரப்படி நல்ல நிறுவனங்களின் நேர்முக தேர்வும் வேலை வாய்ப்பும் சில குறிப்பிட்ட சிறந்த கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கின்றன ..
அவை நீண்ட வருடமாய் கல்வி சேவையில் இருக்கும் கல்லூரிகள்
இப்படிப்பட்ட கல்லூரிகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளே என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரிகளில் இடம் கிடைக்க , அதிக மதிப்பெண்ணும் நிறைய போட்டியும் நிலவுகிறது என்ற ஒரு காரணத்தால் தனியார் பள்ளிகள் வரவேற்கப்பட்டு அரசு பள்ளிகள் புறகணிக்கப் படுகிறது .
பெற்றோர் செய்ய வேண்டியவை
அரசு பள்ளிகளின் மேல் உள்ள பெற்றோரின் எண்ணம் மாற வேண்டும் , இயற்கை சூழல் கொண்ட அழகியல் இடத்தை விட , இருக்கைக்கு இடம் கிடைக்காத இரைச்சலுடன் கூடிய தனியார் பள்ளி எந்த வகையில் சிறந்தது ? என்பதை யோசிக்க வேண்டும் ..
சம்மந்தமே இல்லாமல் கல்வி கட்டணம் செலுத்தும் போது சிந்திக்க வேண்டும் .
இவர்கள் வீணாக கட்டணம் செலுத்தும் பணத்தால் எத்தனையோ அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தி சமூக மாற்றம் தந்திருக்கலாம்,
"இலவச கல்வியை ஏளனம் செய்வோம்
காசு கொடுத்தே கல்வி பெறுவோம் ."
என்ற நிலையை இனி மாற்றுவோம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு மன அழுத்தத்தில் தன் குழந்தையை படிக்க வைப்பதை உணர வேண்டும் .
அக்குழந்தையின் கல்வி மீது பள்ளியை விட நமக்கே அக்கறை அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
ஆசிரியர் செய்ய வேண்டியவை :
தனது பணி ஒரு சேவை பணி என்பதை கூட இனி படித்து தெரிந்து கொள்ளும் நிலைக்கு மாறிவிட்டது அரசு ஆசிரியர் பணி .
அடுத்த சமூகத்தை உருவாக்கும் படைப்பாளின் வழிகாட்டி என்பதை மனதளவில் உணர்ந்து , மாணவர்களுக்கு அறிவை அளவின்றி வழங்க புது வழிகளை ஈடுபாட்டுடன் தேட வேண்டும் .
ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியில் சிறப்பு வகுப்பு (Tuition center) வைத்து , அங்கு வந்தால் மட்டும் பாடம் கற்று தரப்படும் , அதற்க்கு தனியே பணம் கட்ட வேண்டும் என சொல்லும் அவல நிலையை ஆசிரியர்களே உணர்ந்து , தனது மாணவர்களின் கல்வி தரம் உயர இலவசமாக சொல்லி தர வேண்டும் .
மாணவர்களிடம் ஒரு தேடலை , ஈடுபாட்டை கொண்டு வர வேண்டும் ,
தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து முன் உதரணாமாக இருக்க வேண்டும்
.
"சிலவற்றை படிப்போம் பலவற்றை திணிப்போம்
ஏதோ ஒன்றை படைப்போம் படைப்பின் அர்த்தம் அறியோம் ".
இது போல் இல்லாமல் சிறந்த மாணவனை உருவாக்கும் ஆசிரியராக இருப்போம் என உறுதி எடுக்க வேண்டும் .
அரசு செய்ய வேண்டியவை :
அரசு பள்ளிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் .
குறைந்த பட்சம் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தி தரலாம் . விடுதி வசதி இருந்தால் மாணவர்கள் தங்கி படிக்க உதவியாக இருக்கும் .
மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அளிக்கப்படும் சலுகையான "கட்டணம் மறு பெறுதல் ' (Reimbursement of Fees ) முறையை நீக்க வேண்டும் .
பள்ளிகளின் தர வரசை பட்டியல் அறிவித்து, அவற்றிக்கிடையே பல்வேறு முறைகளில் போட்டிகள் வைத்து தரத்தை உயர்த்தலாம் .
மாவட்டம் வாரியாக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் வைத்து அடிக்கடி பார்வையிட்டு பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தலாம் .
மதுபான கடையை வீதிக்கு ஒன்று நடத்தி இளைய சமூகத்தை தவறான பாதையில் அழைத்து செல்வதை விடுத்து சிறப்பு கல்வி மேம்பாடுகளை செய்யலாம் .
மாணவர் செய்ய வேண்டியவை :
தனியார் பள்ளிகளின் மேல் உள்ள மோகத்தையும் , அரசு பள்ளிகளின் மேல் உள்ள தவறான எண்ணத்தையும் தவிர்க்க வேண்டும் .
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வாய்ப்புகளை சிறப்புடன் பயன்படுத்தி உயர வேண்டும் .
தமக்கு இருக்கும் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து , மாணவர்கள் இடையே ஒரு போட்டி கொண்டு வர வேண்டும் .
தனது திறமைகளை வளர்க்க தாமாக முன் வர வேண்டும் .
திறமையான மாணவர்களுக்கு இடையே போட்டி இருப்பின் நிச்சயம் அரசு பள்ளிகள் சாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
இதற்க்கு சில அரசு பள்ளிகள் சான்று .
"சோம்பல் கொண்டு நாம் திரிந்தால் ,
நம்மில் எறியும் தீயும் ஏமாற்றும்
நம்பிக்கை கொண்டு நாம் படித்தால்
நம் சாம்பல் கூட சாதிக்கும் ..!! "
என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் .
தனி மனிதன் செய்ய வேண்டியவை :
தன்னுடைய வாழ்கையை மட்டும் பார்க்காமல் சமூகத்தின் மீது குறைந்தப் பட்ச அக்கறை வேண்டும் .
நாளைய தலைமுறை நம்மை பார்த்து தான் வளர்கிறது என அறிந்து வளர்ச்சி தரும் செயல்களில் செய்ய வேண்டும் .
அரசு பள்ளிகளில் ஊர் பொது மக்கள் இணைந்து ஆண்டு விழா , மாணவர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் அமைத்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் .
ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் .
பள்ளிகளின் சுற்று சூழலை பராமரித்து மேம்படுத்தலாம் .
"பாதமுன் நிற்கும் பாறைகளின்
பட்டை உரித்து படிகளாக்கு
அடுத்த பாதம் அடி வைத்து
பக்குவமாய் பயணம் செய்ய "
என்பதை உணர்த்து சமுக மாற்றத்தில் அதிக பங்கு கொள்ள வேண்டும் .
முடிவுரை :
இன்னும் பல வழிகளில் கல்வி தரம் உயர்த்தி மாற்றம் கொண்டு வரலாம் .
இங்கு அரசு பள்ளிகள் மட்டுமே தன் தரத்தை இழந்தன , ஆனால் இன்னும் அரசு கல்லூரிகள் தன் மதிப்பை இழக்க வில்லை .
"இனி நம்
எண்ணங்களை எடுத்து பார்த்து ,
வியாபாரத்தில் விலை போகும் கல்வி
சிந்தித்தால் மட்டுமே சீர் பெறும் "
என்பதை உணர்ந்து அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த சிறந்த செயல்களில் ஈடுபடுவோம் .
===================================
கடந்த ஒரு வருடமாக
"உன்னால் ஏன் முடியாது " கல்வி சமூக சேவை - என்ற அமைப்பை நிறுவி அதன் வழியில் அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்த்த எனது முயற்சிகளை செய்து வருகிறேன்
==================================