பசுமை திட்டங்கள்

எப்படியாவது பச்சைப்பசேலென்று மரங்கள் சூழ்ந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பது இயற்கை ஆர்வலர்களாகிய நம் அத்தனை பேரின் ஏகோபித்த கனவு...இல்லையா நண்பர்களே..?
மரங்கள் நடுவதில் தீவிரம் காட்டும் நாம்,வளர்ப்பதில் ஏனோ...பாராமுகமாகவே இருக்கிறோம்..20% சதவிகிதத்திற்கும் குறைவாகப்போய்விட்ட காடுகளை எப்படி மீட்டெடுப்பது..? 33 % சராசரியாக இருக்க வேண்டிய வனப்பரப்பினை எப்படி உருவாக்குவது..?
நம்மாழ்வாரின் பிறந்த தினம் வரும் இத்தருணத்தில் மண்டையை குடைந்ததில் ....இப்படி செய்தாலென்ன ...என்று அணிதிரண்டு வந்த ஆலோசனைகள் சிலவற்றின் தொகுப்பு...
ஒன்றிரண்டு கொஞ்சம் முரண்பட்டு தெரிந்தாலும், மடத்தனமாய் இருந்தா லும் ,கோடிக்கணக்கான ஆண்டுகளாய் பூமிக்கு பாதுகாப்பாய், அரணாய், கைகோர்த்துக்கொண்டிருந்த காடுகளையெல்லாம் தந்திரமாக "அறிவியல் வளர்ச்சி" என்ற பெயரில் வெறும் 200 ஆண்டுகளில் விழுங்கிவிட்ட மடத்தனத்தைவிட,முட்டாள்தனத்தை விட மோசமாய் இருக்காது என்பது என் உறுதியான எண்ணம்..
வேடிக்கைக்காக பகிர்ந்து கொள்ளவில்லை நண்பர்களே....வேதனையின் ஆற்றாமையில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்வீர்களென்கிற ஆதங்கத்திலே பகிர்ந்து கொள்கிறேன்..
மரங்களற்றுப்போன பூமி, ஜனன உறுப்புகளற்றுப்போன மானுடத்திற்கு சமம்...
தப்பித்தவறி இருபுறமும் மரங்களடர்ந்த சாலையில் பயணிக்கிறபொழுது மனது அடித்துக் கொள்ளும் " அடுத்த ஐந்தாண்டுத்திட்டத்தின் சாலை விரிவாக்க பணிகளில் முதல் போணி இதுதானோ?" என்று...
மனிதர்களுக்காய் கண்ணீர் சிந்தியது போதும் நண்பர்களே..மீந்திருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதே இன்றைய தலையாய பணி...
பசுமையை காப்பதற்கான ஒரு போர் தொடங்கட்டும்..
... இனி பசுமை திட்டங்கள்
1.ஒவ்வொரு குடியுரிமை பெற்ற இந்தியனும் இரண்டு மரங்களையாவது கட்டாயம் வளர்த்த வேண்டும். இதற்கென இடமில்லாத குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் , அரசாங்கப் புறம்போக்கு நிலத்தில் அதற்கென ஒதுக்கப்படுகிற இடத்தில் வளர்த்த வேண்டும்.
2." அதிக அலுவல்; அதற்கெல்லாம் நேரம் இல்லை" என்று விலகுபவர்களிடம் அந்த மரங்களை வளர்த்து பராமரிப்பதற்கான தொகை யினை மாதாமாதமோ,ஆண்டு சந்தாவாகவோ வசூலித்து , மரம் வளர்ப்பதற்கென ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து அவர்கள் மூலம் வளர்த்த வேண்டும்.
3.யாரொருவர் கல்யாணம் செய்து கொள்வதற்கும் "குறைந்தபட்சம் ஐந்து மரங்களாவது வளர்த்தியிருக்கிறார்" என அதற்கான மரவளர்ப்பு அலுவலர் சான்றிதழை கட்டாயப்படுத்த வேண்டும்.
4."பசுமை பாதுகாப்பு" என்கிற பாடத்திட்டத்தை தமிழ்,ஆங்கிலம் என கட்டாயம் கற்பிக்கப்படுகிற மொழி பாடங்களை போல தனிப்பாட திட்டமாக வைத்து தேர்வும் வைக்க வேண்டும்.
5.எந்த ஒரு எம்எல்ஏ ,எம்பி தேர்தலிலும் யார் நிற்க வேண்டுமென்றாலும் , அந்த வேட்பாளர் குறைந்த பட்சமாக பத்து மரங்களையாவது வளர்த்திருக்க வேண்டும். மரங்களை அன்போடு பராமரிப்பவர் யாரானாலும் ,மனிதர்களையும் அதுபோல நடத்துவார்கள்தானே?
6. காதல் ஜோடிகள் கல்யாணம் செய்து கொண்டு வாழ விரும்பினால்,ஐந்து மரங்களை ஒரு இரண்டு ஆண்டுகளாவது வளர்த்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். இதன்மூலமாக அவசர கதியில் "கண்டதே காட்சி,கொண்டதே கோலம் கல்யாணங்கள் தடுக்கப்படும்; விவாகரத்துக்கள் குறையும் .
7.பணி உயர்வுக்காக காத்திருப்பவர்களில் அதிகபட்சமாக மரங்களை வளர்த்தியவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
8.இட ஒதுக்கீடு எப்படி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதோ,அதுபோல "மர ஒதுக்கீடு குறியீடு" ஒன்று நடைமுறை படுத்தப்பட வேண்டும். மர பாதுகாப்பு, மர வளர்ப்பு,இயற்கை பாதுகாப்பு பணிகளில் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு,ஆர்வத்தோடு பணிபுரிந்த மாணவர்களுக்கு இதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
9.சிறைச்சாலைகளில் அதிகபட்ச மரங்களை வளர்க்கும் குற்றவாளி களின் தண்டனைக்காலத்தை கணிசமாக குறைக்கலாம்.
10.மரம்,பசுமை,சுற்றுச்சூழல் குறித்த சினிமாப் படம் எடுப்பவர்களுக்கு எந்தவிதமான வரிவிதிப்பும் விதிக்கக்கூடாது. ஊக்கத்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படவேண்டும்.
11. உயர்ந்த பட்ச எண்ணிக்கையில்,உதாரணமாக ஒரு கோடி மரங்கள் வைத்து வளர்த்தியவர்களுக்கு உயரிய விருதான பாரத ரத்னா போன்ற பட்டம் வழங்கப்படுவது சிறந்த வழிகாட்டியாக அமையும்.
12. முக்கியமாக... மரம் வளர்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் பணிகளை கணக்கிடுவது,திட்டமிடுவது,சான்றிதழ் வழங்குவது ஆகிய அனைத்து பசுமை பணிகளும் அரசு சாராத, உலகத்தரம் வாய்ந்த முண்ணனி அமைப்புகளின் மூலமாகவே செயல்படுத்தப்பட வேண்டும்.எந்த காரணம் கொண்டும் அரசாங்கத்தின் தலையீடு ஒரு சதவீதம் கூட இருக்கக்கூடாது...
பார்ப்பதற்கு பரிகாசமளிக்க கூடிய விசயங்களைப்போல தெரிந்தாலும், இதோ ...கண்களை எரிக்கும் இந்த கடும் கோடையில் ,நாவறண்டு ,தண்ணீருக்காய் தவித்து,பல கிமீ தூரம் காலி குடங்களை எடுத்துக்கொண்டு நமது பெண்கள் நாயாய் அலைகையில் இதன் அருமை புரியும்..
"என்ன வெய்யில்,என்ன வெய்யில்" என வழிகிற வியர்வையை துடைத்து எறிந்து, எதிர்ப்படும் ஒரு ஆலமரத்து நிழலிலோ,புளிய மரத்து நிழலிலோ சற்றே அமர்ந்து கண்களை மூடி நீங்கள் இளைப்பாறுகையில்..இங்கு சொல்லப்பட்ட விசயங்களை மெல்ல அசைபோடுங்கள்....
"நிச்சயம் தேவைதான்" என நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்...!!!!