பழையன புகுதல்

நடுஇரவு விருந்தில்
கலப்பின கோழித்தொடை
மென்றுகொண்டே
என்
பேரத்தலைமுறைகள்
சிலாகித்திருக்கும்
அம்மாவின் கையுறை
மணம்போல் வருமாயென.....!!!

சடுகுடுக் களங்களின்
புழுதிச் சிரங்குகள்
தொலைத்துவிட்டு....
சலவை மேடைகளில்
இரசாயன வண்ணங்களின்
ஒவ்வாமை சொறிகளோடு
படர்ந்திருக்கும்
வேதியியல் கோலங்கள்......!!!

அருங்காட்சியக
நுண்கற்றைத் திரைகளில்
உழுதுகொண்டிருக்கும்
ஏர்க்கலப்பை...
அதனருகில் சுழன்று
சுயவிளக்கம் பகிர்ந்திருக்கும்
நெல்மணிகளின்
உயிர்சித்திரங்கள்....!!!

ஏதோவொரு
புரட்சிக் கழிவில்
மாறிவிட்டிருந்த உலகப்
பொதுமொழிக்கெதிராய்
ஆங்கிலத் தொன்மை
பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அப்போதைய
சமூக நெடுந்தளங்கள்....!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (9-Jul-14, 8:04 am)
பார்வை : 142

மேலே