அன்பினுருவே அன்னையே
தாலாட்டுவாள்!
பாலூட்டுவாள்!!
அன்னைக்கு நிகரிந்த
அகிலத்திலுண்டோ?!
அன்பினையெல்லாம்
அன்னத்திலிட்டு,
அறிவினைக்குழைத்து
அமுதுணவாக்கி
பேரின்பமாய் அவளிடும் வகைக்கு
எவ்வித பொருளும் ஈடிணையில்லை!
ஈன்ற பொழுதினில்
பெரிதுவப்பாள்!
குழந்தையின்,
இனிய சிரிப்பினில்
இன்புறுவாள்!!
தோன்றும்போதெல்லாம்
கன்னமிட்டு -அதன்
கொஞ்சு சிரிப்பினில்
மனம் நிறைவாள்!!
பாத்திரம் நிறைய
உணவிருந்தாலும்
பிள்ளையின் மழலையில்
பசிமறப்பாள்!
நேத்திரம் நிறைய
முகம் கண்டு,
பரவசத்தால்,
விழி நீர் உகுப்பாள்!!
சுயநலமில்லை!
அவளன்பினை அளவிட
சூத்ரமுமில்லை!!
கோத்திரம் எதுவென்றாலும்
அங்கே அன்பின் பாத்திரம்
அன்னையே, அன்னையே!!!
தரையினில் தவழ்வாள்!
தாளமிடுவாள்!!
நாணம் கொள்வாள்!
நாட்யமெல்லாம் செய்வாள்!!
எல்லாமும் சபையிலல்ல...
அவளீன்ற பிள்ளைக்கென
சமையலறையில்!
இன்னலிருப்பினும்
இன்னமும் செய்வாள்!
எல்லாமு மென்னால்
சொல்லாக்க இயலுமோ?
உடலுயிர் ஆக்கி - தம்
உடலுயிரும் ஈந்திடும்
தன்னலமில்லா தாயன்பிற்கிந்த
தரணியும் ஈடாமோ?!
கற்றோர் தொழச்சொலும் முதலிறை,
தாய்!
கலங்கமிலாத தெளி நீர்,
தாய்!!
பூமணம் கமழும் குளிர் தென்றல்,
தாய்!
பொங்கு மாக்கடலுளோர் புதையலும்
தாய்!!
திங்களும், தீஞ்சுவைத் தேன்துளியும்
தாய்!!!
நற்பொருளென்றென
எத்தனை இருப்பினும்,
மங்களம் தருவன
மலிந்தே இருப்பினும்
எல்லா நலனும்
ஓருருவாயினும்
தாய்க்கு நேரிந்த நிலந்தனில் தாயே!!!
**************************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்