அன்ன தானம்
குழந்தையாக இருந்தபோது
பசித்ததில்லை
அம்மாவின் வயிற்றில் உணவும்
செமித்ததில்லை
வயதான அம்மாவுக்குப்
பசிக்கிறது
என்வயிறோ உணவால் நிரம்பி
வழிகிறது
குழந்தையில் மிதமிஞ்சிய உணவால்
பாதிநாள் வாந்தி மீதிநாள்
பேதி
எந்த நேரமும் எனக்குப்
புத்தாடை
வயதான அம்மாவுக்கு
ஒட்டிய வயிறு
கிழமைக்கு ஒருதடவை
பாயில் மலம்
ஆடை மாற்றுவது இருக்க
மலங்கூட அப்படியே
சிறுவயதில் நான் இருந்தபோது
கண்டவரிடம் எனைக்காட்டி
இது எனது பிள்ளையென்று
பெருமையாய் சொல்லிக்கொண்டாள்
படுக்கையில் அவள் இருக்க
வீடுவரும் நண்பர்பர்கள்
நாற்றம் என்னவென்று கேட்டிருக்க
எலி ஒன்று செத்துக்கிடப்பதாய்
பொய்சொல்லி தப்பித்தேன்
ஊரான் பிள்ளை உண்பதைநான்
வாய் பார்த்தால்
மானமிழந்து பிச்சையெடுத்து
அதேயுணவு தந்திடுவாள்
ஊராருக்கு சோறுபோட்டு
பெருமையாய் அன்னதானம்
அம்மாவை நாறப்போட்டு
பொறுக்குமாறு உபதேசம்
கத்தி வாங்கி நான் கேட்டால்
புத்தி சொல்லி பொம்மை தருவாள்
கத்தி அவள் சோறு கேட்டால்
சுத்திப் பார்த்து சும்மா இருந்தேன்
அம்மா அழைத்தால் என்காது
சும்மாவும் கேட்காது
மாலையில் ஒருநாள் வீடுவந்தேன்
ஓடிவந்து மகன் காதில்சொன்னான்
வயதாகி நீங்கள் படுத்திருந்தால்
வேளைக்கு சோறு போடச்சொல்லி
பாட்டி எனக்கு சொல்லித்தந்தாள்
முட்டிமோதி ஓடிச்சென்றேன்
அம்மா பாயில் செத்திருந்தாள்