அந்த நாள் ஞாபகம்
பொருளீட்டும் முயற்சியில்
தாமதமாக வீடு வரும்
தந்தையின் வருகைக்காய்க்
காத்திருந்து ,அவரின்
அன்புக்கரங்களால்
ஒரு வாய் சோறு
ஊட்டிக் கொண்ட ஞாபகம்!
முகத்தில் சோப்புடன் அவர்
சவரம் செய்து கொள்ளும்போது
அய்யப்ப சாமியைப் போல்
குத்த வைத்து அமர்ந்து கொண்டு
சுத்தமாகும் அவர் முகத்தை
சிரிப்புடன் பார்த்த ஞாபகம்!
பெரியவனாகி விட்டால் எனக்கு
என்ன செய்வாய் ராஜா? என
எதிர்பார்ப்புடன் கேட்டபோது ,
சிவப்புக் கார் வாங்கி
சிவப்புத் தொப்பியுடன்
அழைத்துச் செல்வேன் அப்பா! என்ற
என் மழலைச் சொல்கேட்டு அவர்
மனம் மகிழ்ந்து சிரித்த ஞாபகம்!
ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு
ஒரு பாடமாக விளங்கியவர்
திடீரென ஒரு நாள்
படமாக மாறிய ஞாபகம்!
வாய்விட்டுக் கதறினாலும்.
வண்ணம் கொண்ட அந்த
வெண்ணிலவு இனி
வானம் விட்டு வராது என
என்னை நானே தேற்றிக்கொண்டு
எழுந்து நின்ற ஞாபகம்!
இப்போது என் வீட்டுக்கு
முன்னாள் நிற்கும் சிவப்பு நிற
மகிழ்வுந்தில் என்தந்தை
இப்போதும் படமாக !
எப்போதும் ஒரு பாடமாக!
(தலைப்பு கொடுத்த சாந்தி மேடமுக்கு என் நன்றி!)