கடவுள் புண்ணியத்தில்

முன்னுரை:

God Revealed: Revisit Your Past to Enrich Your Future (Morgan James Faith) Paperback – February 2, 2014 by Fred Sievert (Author) என்ற புத்தகத்தைப் படித்த பொழுது என் கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் தெய்வாதீனமாக நிகழ்ந்தவையாகப் புலப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்தெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சிறு பிள்ளையாக இருந்ததிலிருந்து தொடங்கி, பள்ளிப் படிப்பு, உயர் கல்வி, வேலை,மண வாழ்க்கை என்று கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பின் நோக்குங்கால் பல முறை தெய்வீக ஆற்றல் வழி நடத்தியதை உணர முடிகிறது. இந்நிகழ்ச்சிகள் நடுக்கும்போதொவெனில் நான் அவ்வாறு உணரவோ, தெய்வீக ஆற்றலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவோ இல்லை! இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து பகிர்ந்து கொள்வதன் மூலம் இவற்றைப் படிக்கும் மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் தெய்வாதீனம் என்று அடையாளம் காணக்கூடிய சம்பவங்களைக் கண்டு கொள்ளவும், வரும் காலத்தில் நிகழக்கூடிய தெய்வாதீனமான சம்பவங்களைப் புரிந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும் உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நிகழ்ச்சிகளை என் மனத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்த நிகழ்ச்சியில் தொடங்கி, வரிசையாக நினைவுக்கு வரும் சம்பவங்களைக் கூறவிருக்கிறேன். பின்னால் புத்தக வடிவில் வெளியிடும் பொழுது இந்த வரிசையை மிகச் சிறு வயதிலிருந்து தொடங்கி நிகழ் காலம் வரை என்று மாற்ற எண்ணுகிறேன்.

தெய்வாதீனம் 1:

1988 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓர் இரவு. நான் 1986 ஆகஸ்ட் முதல் வேலை இல்லாமல் இருந்த காலம்.

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் போக்குவரத்து ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி பொறியாளராக இருந்தவனை நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி வேலையை விட்டு நீக்கிவிட்டனர். என் குழந்தைகள்
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் ஆஸ்டின் கம்யூனிட்டி கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும், வணிக பள்ளியில் (Business School) பகுதி நேர ஆராய்ச்சி உதவியாளராகவும் மற்ற சில உதிரி வேலைகளும் செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும், ஆராய்ச்சி பொறியாளராகப் பெற்ற சம்பளத்தில் கால் பகுதி வருமானத்தில் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சேமிப்பு நிதி கரைந்து கொண்டிருந்தது. என் மனைவி (வேதா) எங்கள் வீட்டில் குழந்தைகள் காக்கும் பணி (baby sitting) செய்தும், குழந்தைகள் (ஸௌமியா, ப்ரபாகர்) கையில் கிடைத்த, பகுதி நேர வேலைகள் செய்யத் தொடங்கியதும் இந்தச் சமயத்தில்தான். இன்னும் ஒரு சில மாதங்கள் இப்படியே போயிருந்தால் நாங்கள் அமெரிக்க வாழ்க்கையைத் தொடர்வது பெரிய, தீர்க்க முடியாத பிரச்சினை ஆகி இருக்கும்!

இந்த சமயத்தில்தான் அந்த டிசம்பர் இரவு, நானும் என் மனைவியும் மளிகை வாங்க கடைக்கு சென்றோம். என் மனைவி பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கையில் நான் ஆழ்ந்த யோசனையும், கவலையுமாய் கடையில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அப்படி வரும்போது அங்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் கிளைட் லீ இருப்பதைப்பார்த்தேன். "நல்ல மாலை Dr.Lee". "அடடே! நீங்களா? என்ன சமாச்சாரம்? " " வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்! "பின்னர் அவர் தனது வழியில் செல்ல நாங்கள் எம் வழியில் சென்றோம்.

- அடுத்த நாள் காலை, பிசினஸ் ஸ்கூலில் நான் இருக்கும் சமயம், முனைவர் ஜோ. டபிள்யூ. நீல் (Dr. Joe W. Neal, தலைவர் 1986-1995, டெக்சாஸ் சர்வதேச கூட்டமைப்பு ), என்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"டாக்டர் லீ உங்களைக் குறிப்பிட்டார். மலேஷியாவில் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்குப் பொறியியல் ஆசிரியர் பதவிக்கு ஆள் தேவை. நீங்கள் செல்லச் சம்மதமா? " " விவரங்கள் சொல்லுங்கள்? "
"இன்று காலை 10 மணிக்கு மலேஷியா செல்ல தயாராக உள்ள ஆசிரிய உறுப்பினர்கள் குழுவுக்கு விவரங்கள் கூறும் தகவற் கூட்டம் வைத்திருக்கிறோம். வர முடியுமா?? "

நான் அங்கு சென்றேன். ஷா ஆலம், மலேஷியாவில் மலேசிய மாணவர்களுக்கு அடிப்படை பொறியியல் படிப்புகள் கற்பிக்கும் வேலை. உதவிப் பேராசிரியர் பதவி. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட மலாய் மாணவர்கள் (Bhumiputras என அழைக்கப்படும் சீன அல்லது இந்திய வம்சாவளி மலேசியர்களினின்றும் வேறுபட்ட, மலேஷியப் பூர்வ குடிமக்கள்). சம்பளம் ஆராய்ச்சி பொறியாளர் பதவியில் பெர்ற அளவுக்கும், மற்றும் பல perquisites சேர்த்து இருந்தது. நான் ஒரு வாரத்திற்குள் ஷா ஆலத்தில் பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்! முதலில் ஒரு செமஸ்டர் வய்ப்பாக இருந்தது ஆனால் அது 1988 இறுதிவரை நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் வேதாவையும் கூட்டிச் செல்ல முடிந்தது. என் குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறைக்கு அங்கு வந்தனர்.

ஆகஸ்ட் 1986-ல், இது போன்ற வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் என்னால் அதைப் பயன் படுத்திக் கொள்ள முடிந்திருக்காது. ஏனெனில் அப்போது குழந்தைகள் இன்னும் சிறார்களே. என் மகள் அப்போதுதான் வண்டி ஓட்டும் தகுதி பெற்றிருந்தாள். என் மகன் இன்னும் அதற்கான வயதை அடைந்திருக்கவில்லை. 1988 ஆம் ஆண்டிலோ அவர்கள் தங்களை பார்த்து கொள்ள முடியும் என்ற நிலைமை அவர்களை விட்டு விட்டு நான் மலேஷியா செல்லும் நம்பிக்கையைக் கொடுத்தது.

எனவே, சரியான சமயத்தில் நான் அந்த இரவு கடைக்கு சென்று டாக்டர் லீயை சந்திக்க நேர்ந்தது தெய்வாதீனம் என்று உறுதியாக எண்ணுகிறேன்!

எழுதியவர் : முத்துசுப்ரமண்யம் (12-Jul-14, 7:17 am)
பார்வை : 490

மேலே