செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில் - ஆசாரக் கோவை 56

முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் - தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில். 56 ஆசாரக் கோவை

பொருளுரை:

அறிவுடையோர் முற்றிய புல்லினிடத்தும், முற்றிய காட்டினிடத்தும் சேர்ந்து தங்கி இருக்க மாட்டார்.

அவற்றிற்கு நெருப்பு வைக்க மாட்டார். மழை பெய்கையில் காலைப் பரப்பி வைத்து ஓட மாட்டார்.

தமக்குத் பழக்கமில்லாத காட்டில் தனியராக நடமாட மாட்டார். மழை குறைந்து வறுமை மிகுதியாக பெருகி வருத்தினாலும் தொன்று தொட்டு வந்த தமது குலநெறியினின்று நீங்கிய செயலைச் செய்ய மாட்டார்.

கருத்துரை:

மழை பெய்யாது வறுமை மிகுந்தாலும் தங்குல ஒழுக்கத்தை நீங்கிய தொழில்களை அறிவுடையோர் செய்யார்.

உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-14, 5:52 am)
பார்வை : 81

மேலே