தனிமை

*********
தனிமை ஒரு புத்தகம்
கிடைக்கும்போது
வாசித்துக் கொள்ள வேண்டும்

தனிமை ஒரு தூரிகை
எண்ணச் சுவரில்
வண்ண ஓவியம்
வரைந்து பார்க்கலாம்

தனிமை ஒரு புல்வெளி
ஒவ்வொரு புல் நுனியிலும்
பனித்துளியாய்த் தொங்கலாம்

தனிமை ஒரு உளி
உனக்குள் இருக்கும் உன்னை
நீயே செதுக்கலாம்

தனிமை ஒரு பூங்கா
யாரும் அறியாமல்
நீயே சுற்றிப் பார்க்கலாம்

தனிமை ஒரு தாலாட்டு
மழலையாகும் யாரும்
கண்ணயரலாம்

தனிமை ஒரு தேசிய கீதம்
எழுந்து நின்று
வணக்கம் செலுத்தலாம்

தனிமை ஒரு சுதந்திரம்
உன் கொடியை
நீயே ஏற்றிக் கொள்ளலாம்

தனிமை ஒரு பொதுத்தேர்தல்
அபேட்சகராகி நின்றுபார்
உன் வாக்கை கள்ளவாக்காய்
எவரும் இடுவதில்லை

தனிமை ஒரு மேடை
உனக்கான பிரச்சாரத்தை
மௌனமாய்
நிகழ்த்திக் கொள்ளலாம்

தனிமை ஒரு பாராளுமன்றம்
ஊழல் இல்லா ஆட்சியில்
கறைபடியா கைக்குச் சொந்தக்காரராகலாம்

தனிமை ஒரு சனநாயகம்
உனக்காக உன்னால் நீயே
ஆட்சி செய்யலாம்

தனிமை ஒரு போராட்டம்
வெற்றியும் தோல்வியும்
உனக்குள் அடக்கம்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-24, 1:10 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thanimai
பார்வை : 76

மேலே