தெய்வாதீனம் 2 கடைசி நொடியில் கிடைத்த உதவித் தொகை

தெய்வாதீனம் 2: கடைசி நொடியில் கிடைத்த உதவித் தொகை.
அயல் நாடு சென்று பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி என்னுள் நுழைந்து விட்டது. அந்த வெறியில் நான் செய்த - இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அடி முட்டாள் தனமான - செய்கைகளும், கடைசி நிமிடத்தில் தெய்வீக அருள் வந்து காப்பாற்றியதையும் மறக்கவே முடியாது.

இந்த வெறிக்கு வித்திட்டவர் ஒரு கட்டட வேலை காவல்காரர்! பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம். நானும், என் தம்பியும் அங்கு தினமும் சென்று வேடிக்கை பார்ப்போம். அப்படி ஒரு நாள் நான் அந்த இடத்தை நெருங்கும் போது கட்டடக் காவலர் “சின்ன ஐயா ஃபாரின் போய்ட்டு வரணும்” என்று சொன்னது காதில் விழுந்தது.

பிறகு கிண்டி இஞ்சினீரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் போது இறுதி ஆண்டு மாணவர் இருவர் ஆஸ்திரேலியா சென்று திரும்பியது தெரிந்தது. இதை ஒட்டி மேல் விவரங்கள் சேகரித்து, நானும் சக மாணவர்களில் ஒருவனான எஸ். வெங்கடேசனும், ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் போக ஏற்பாடுகள் செய்ய முயற்சிகள் எடுத்தோம். இடையில் நகரமைப்பு இயக்ககத்தில் வேலை கிடைத்து, ஐ. ஐ. டி. (கரக்பூர்) மேற்படிப்பு, திருமணம் இத்யாதி நடந்தேறின. சென்னை பல்கலைக் கழக கட்டிடக் கலை மற்றும் நகரமைப்புப் பள்ளியில் உதவிப் பேராசிரியராகும் (1969) வரை வெளிநாடு போகும் எண்ணம் அமுங்கியிருந்தது. வெங்கடேசனும் வேறு வழி சென்று விட்டான்.

சிறிது சிறிதாக, சென்னைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு வேலை திருப்தியும், முன்னேற வழியும் இல்லை என்ற நிலையும், பல முறை உயர் பதவி என்னைத் தாண்டி இளையவர்களுக்கும், குறைந்த அனுபவம் கொண்டவர்களுக்கும் செல்லவும், பழைய “வெறிக் கனல்” மூண்டெழுந்தது. கடவுச் சீட்டுப் பெறுதல், மேற்படிப்பு அனுமதி பெற உதவும் பரீட்சைகள் (GRE, TOEFL) என்று ஒவ்வொன்றாக முடித்து, பல இடங்களுக்கும் மனு போட ஆரம்பித்தேன்.

நார்த்வெஸ்டெர்ன் (Northwestern) பல்கலைக் கழகத்திலிருந்து (NU) அனுமதிக் கடிதம் வந்தது. இங்குதான் அடிமுட்டாள்தனமெனக் கூறத்தகும் காரியத்தில் இறங்கினேன்: என்னுடைய ஆயுள்காப்பீட்டையும், வீட்டையும் பாங்கில் அடகு வைத்து, சிகாகோ செல்லப் பயணச்சீட்டும் வாங்கி விட்டேன். “அங்கு” போன பிறகு உதவித் தொகை (assitantship) கிடைக்கும்; அது தாராளம் என்றெல்லாம் (தவறாக) நினைத்தேன்.

நல்ல காலம்!

ஆண்டவன் புண்ணியத்தில், பயணத்திற்கு இரண்டு நாட்கள் முன் NU விலிருந்து பகுதி நேர ஆராய்ச்சி உதவியாளனாக மாதம் $350ம், கல்லூரி போதனை இலவசம் என்றும் தந்தி வந்தது!

”பல முறை தடுத்தேன்; இவ்வளவு பிடிவாதமாக, மனைவி, இரண்டு குழந்தைகள், திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கை, கல்லூரிப் படிப்பு முடிக்காத தம்பி, வேலை ஓய்வு பெற்று கிராமத்தில் இருக்கும் தாய் தந்தை இவர்களையெல்லாம் மறந்து, இருக்கும் வேலையில் 6 மாத அரைச் சம்பள (ரூ. 450) விடுமுறையும், கையில் சொற்பக் காசும் ($80) கொண்டு என்ன தைரியத்தில் அமெரிக்கா போகிறாய்? முட்டாளே! இந்தா உதவித் தொகை.போய் ஒழுங்காகப் படித்து வா” என்று கூறினது யார்?


ஆன்றோர் சொல்:

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு முறை தெய்வீக ஆற்றல் வெள்ளமாகப் பாய்கிறது. மனிதராகப் பிறந்தவர் செய்ய வேண்டியதெல்லாம் கடமையை தன்னால் இயன்றவரை செவ்வனே செய்வதே - படகை கீழ் நோக்கி வரும் வெள்ளத்தை மீறி ஆற்றினுள் செலுத்துவது போன்று. கவனமாகவும், முழு அர்ப்பணிப்புடனும் கடமையைச் செய்து கொண்டிருக்கையில் தக்க சமயத்தில் திருவருள் பாலித்து எல்லா செல்வங்களும் வந்தடையும். --
ஸ்ரீமத் சுவாமி சித்பவாநந்தா. பகவத் கீதை அத் 2:32 விளக்கம்

எழுதியவர் : இன்னமுதம் (15-Jul-14, 3:07 am)
பார்வை : 142

மேலே