ஒரு ஐடி ரெய்டு
ஆ’ நெடில் அல்ல... ‘அ’ குறில்!
ஒரு ஐ.டி. ரெய்டு
தமிழ்ப் பிரபா, ஓவியங்கள்: ஹாசிப்கான்
நன்றி :ஆனந்த விகடன்
இன்ஜினீயரிங் கவுன்சலிங், தள்ளுமுள்ளு தகராறாகிவிட்டது இந்த வருடம். போகட்டும்... எப்படியும் ஏதோ ஒரு 'நகரத்துக்கு மிக அருகில்’ அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்து, நான்கு வருடங்கள் முட்டி மோதி படித்து, அரியர்ஸ் களைந்து, 'இன்ஜினீயர்’ பட்டத்துடன் வெளியே வந்து காலர் நிமிர்த்தவிருக்கும் நண்பர்களே... 'ஐ.டி ஜாப்’ என்ற கலர் கலர் கனவுகளுடன் காத்திருப்பீர்கள். ஆனால், அந்த கார்ப்பரேட் காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா? ஒரு ஜாலி டிரெய்லர் அடிக்கலாமா?!
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐ.டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த நாளில் இருந்தே, நம்மை ஒரு சிறந்த பலி ஆடாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 3 மணிக்கு எழுப்பி, 'டெல் அபவ்ட் யுவர்செல்ஃப்’ என்று யார் கேட்டாலும், சிறுவயதில் டிபன் பாக்ஸைத் தொலைத்ததில் இருந்து சரளமாக ஒப்பித்தால், இன்டர்வியூவின் முதல் ரவுண்ட் வாய்ப்பு பிரகாசம். இரண்டாவது கட்டமாக, காலை 10 மணிக்கு இன்டர்வியூ வந்தவனை, சேனல்களில் 'கில்மா டாக்டர்கள்’ வரும் இரவு ஸ்லாட் ஒளிபரப்பாகும் வரை பல ரவுண்டுகள் சோதிப்பார்கள். அப்போதும் வேலை கிடைப்பது, கிடைக்காமல்போவது எல்லாம் ஒருவனின் அன்றைய ராசிபலனைப் பொறுத்தது. ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால், குறிப்பாக 'ஃப்ரெஷ்ஷர்’கள் என்று சொல்லப்படும் ஆட்டுக்குட்டிகளுக்கு, அப்போதுதான் போர் ஆரம்பம்!
பேரைச் சொல்லவா... அது நியாயமாகுமா?
முதல் நாள் வேலைக்குச் சென்றவுடன் ஏ.சி குளிர், வெஸ்டர்ன் டாய்லெட், கட்டாய ஷூ பாலீஷ் போன்றவற்றைவிட அசௌகரியம் தரும் ஒரு சடங்கு இருக்கிறது. அது, எவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களை 'சார்’, 'மேடம்’ என்று அழைக்காமல், பெயர் சொல்லியே கூப்பிட வேண்டும். யாராவது வெள்ளையாக, அதுவும் கண்ணாடி போட்டிருந்தாலே அனிச்சையாக 'சார்/மேடம்’ என்றே அழைத்துப் பழக்கப்பட்ட நமக்கு, அந்தச் சாங்கியம் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தும். அலுவலகச் சடங்காக இருந்தாலும், 'பேரைச் சொல்லிக் கூப்பிடுறானே..!’ என்ற கடுப்போ என்னவோ, ஃப்ரெஷ்ஷர்களுக்கு இந்த சீனியர்கள் 'டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்’ கற்றுக்கொடுக்காமல் ஏங்கவிடுவார்கள். ஆனால், ஃப்ரெஷ்ஷர் பெண்ணாக இருந்தால், உடனே சில 'மகளிர் மட்டும்’ நாசர்கள் 'control F' போட்டு அவர்களைக் கண்டுபிடித்து வந்து அன்பு ஒழுகப் பேசி, வேலை உட்பட எல்லா விஷயத்திலும் நேசக்கரம் நீட்டுவார்கள். அதுவே பையனாக இருந்தால்... அவன் 'புதுப்பேட்டை’ தனுஷைவிட மிக மோசமாகப் போராடி முன்னுக்கு வர வேண்டும்!
காபி மெஷினுக்கு 'அண்டா’ கா கசம்!
ஐ.டி அலுவலகங்களில் கடினமாக உழைத்துக் களைப்பவர்களுக்கு, ஜீவாதாரத் தெம்பு ஊட்டுவது 'காபி மெஷின்’. அதனுடைய வயிற்றில் டிகாக்ஷன், பால், சுடுதண்ணி போன்ற திரவப் பொருட்கள் அடங்கி இருக்கும். நாம் அதன் நெற்றிப்பொட்டில் அழுத்தி ஒரு கைநாட்டு வைத்தவுடன், விணுச்சக்கரவர்த்தி காறித் துப்புவதுபோல சத்தம் எழுப்பிவிட்டுப் பிறகு அதன் சேவையைச் செய்யும். இதற்காக கம்பெனியோ, காபி மெஷினோ நம்மிடம் நயாபைசா வாங்குவது இல்லை. ஆனால், இலவசமாகத் தருவதை ஏன் 'தம்துண்டு’ குடிக்க வேண்டும் என்று, சில மொடா முழுங்கிகள் சிறிய காகிதக் கோப்பைகளைப் பயன்படுத்தாமல், அண்டா சைஸ் 'மக்’ கொண்டுவந்து மெஷினின் உள் டப்பியைக் காலி செய்துவிட்டுப் போவார்கள்!
கலாசாரம் காப்பாத்தலையோ... கலாசாரம்!
கார்ப்பரேட் கம்பெனிகளில் 'எத்னிக் வியர்’ என்றொரு சடங்கு நாள் இருக்கிறது. அதாவது பண்டிகை மற்றும் தேசியத் தினங்களில் நம் நாட்டின் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக, பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்று நிர்வாகத்தார் அன்புக் கட்டளை இடுவார்கள். 'சும்மா இருக்கும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி’ இந்த வைபவ தினத்தின்போது சில அல்டாப்பு பக்கிகள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் பாரம்பரியம், அதிகபட்சமாக பெல்ட் உதவியுடன் வேட்டி கட்டிக்கொண்டு வருவதோடு முடிந்துவிடும். ஆனால், சில ஆர்வக்கோளாறுகள் அன்று ஒருநாள் மட்டும் 'அனந்த் வைத்தியநாதனாக’ தன்னை மாற்றிக்கொண்டு வாடாமல்லி, ஆகாய நீலம் போன்ற நிறங்களில் சுடிதார் அணிந்து வந்து, நாள் முழுக்கத் துப்பட்டாவைச் சரிசெய்து கொண்டிருப்பார்கள். சுதந்திர/குடியரசு தினங்களில் ஆம் ஆத்மி குல்லா சகிதம், ரயில்வே கேன்டீன் சர்வீஸ் பாய் போல ஃப்ளோரில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
தேவதைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பாரம்பரியம், கலாசாரம் என்றதும் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது புடைவை. இ-மெயில் சர்க்குலர் வந்தவுடனேயே அன்றைய தினம் என்ன கலரில் வரவேண்டும், அளவு ஜாக்கெட்டுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் இறங்கிவிடுவார்கள். 'சம்பவத் தினத்தன்று’ எக்ஸ்ட்ரா கோட்டிங் கெட்டப்பில் அருமையான ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வரை, பொருட்காட்சியில் பிள்ளையைப் பறிகொடுத்ததுபோல அங்கும் இங்கும் அல்லோலகல்லோலம்தான். இதில் சில பெண்கள், லீப் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சேலை கட்டுவார்கள் என்று எளிதில் இனங்கண்டுகொள்ளலாம். மாறுவேடப் போட்டிக்காக டீச்சர் கெட்டப் போட்டு வந்த தோரணை அவர்களிடம் இயல்பாக இருக்கும். சேலைக் கசகசப்பு காரணமாக எப்போதும் மைல்டு எரிச்சலில் இருப்பார்கள். அப்போது அவர்களிடம் சென்று, 'ஹேய்... நீ வி.டி.வி ஜெஸ்ஸி மாதிரியே இருக்க’ என்று கிசுகிசுப்பதோடு தனிப்பட்ட முறையில் அதையே மெசேஜாக அனுப்பினால் (ஸ்மைலி போடக் கூடாது), ஓரளவு சகஜமாகிவிடுவார்கள்.
மேனேஜர்ஸ்களுக்கும் இதுமாதிரி ஜிகுஜிகு ஆடைகள் மீது லவ் இருந்தாலும், தாங்கள் மேலதிகாரிகள் என்பதால், உயர்தர லினென் மெட்டீரியலில் ஜிப்பா அணிந்து வருவதோடு நிறுத்திக்கொள்வார்கள். அதோடு விடுமுறை தினம் அதுவுமாக, தன் அடிமைகள் வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களைக் குஷிப்படுத்தும் வகையில் கேபினுக்கு வந்து நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 'இப்போ போறியா... இல்ல வாய்க்குள்ள கத்தியை விட்டுச் சுத்தவா?’ என்று மனதுக்குள் தோன்றினாலும், அடுத்த அப்ரைசலை மனதில் வைத்துக்கொண்டு ஒருவாறாகச் சிரித்துச் சமாளிக்க வேண்டும்!
லிஃப்ட்டாலஜி!
லிஃப்ட்டை முன்னிட்டு நடக்கும் அழிச்சாட்டியங்களும் அநேகம். லிஃப்ட்டில் இருப்பவர்கள் வெளியே வரும் நபர்களுக்குக்கூட வழிவிடாமல், உலக மக்களை வேற்றுக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லும் கடைசி பஸ்போல லிஃப்ட்டைக் கருதுவார்கள். இன்னும் சில ஆர்வக்கோளாறுகள் லிஃப்ட்டில் இருக்கும் இரண்டு நிமிடங்களுக்குள் சந்தானத்தைவிட அதிக ஜோக்குகளைச் சொல்லி, உள்ளிருக்கும் பெண்களை வசீகரிக்க முயல்வார்கள். ஆனால், அந்தப் பெண்கள் செம உஷார். பையன், என்னதான் கர்ணம் அடித்தாலும் மன்மோகன்ஜி மாதிரி முகத்தை வைத்துச் சமாளித்து, பிறகு அவன் இல்லாத நேரத்தில் 'சிரிச்சாப் போச்சு’ ரவுண்ட் முடிந்தது போல சிரிப்பார்கள்!
ஆன்சைட் மச்சி!
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதில் இருக்கும் மிகப் பெரிய கொடுப்பினையே, உள்ளூர் எம்.ஜி.ஆர் சமாதியைக்கூடப் பார்த்திராத முருகேசன்கள் எல்லாம் ஆன்சைட் என்ற பெயரில் வெளிநாட்டுக்குச் சென்று ஷேக்ஸ்பியர் சமாதிக்கு முத்தம் கொடுத்தபடி போட்டோ அப்லோடிக்கொண்டிருப்பார்கள். பழைய ஃபிலிம்ரோல் கேமரா என்றால், ஒரு ஆன்சைட்டுக்குச் சென்று இவர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்குக் குறைந்தது 5,000 ஃபிலிம் ரோல்கள் காலி ஆகியிருக்கும் என்று ஃபேஸ்புக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. க்ளிக், டெலிட் டிஜிட்டல் யுகம் என்பதால், அந்தச் செலவு இப்போது மிச்சம். ஆன்சைட் செல்லும் பேர்வழிகள் சரக்குப் பாட்டில், சென்ட் பாட்டிலோடு கொஞ்சம் திமிரையும் அங்கு இருந்து எடுத்து வருவார்கள். 'நாங்கள்லாம் யாரு?’ என்கிற மொழி முகத்தில் கொஞ்ச நாளுக்கு ஜாடை பேசும். ஆனால், காலத்துக்கு ஈவு இரக்கமே இருக்காது அல்லவா? ஆன்சைட் போய்விட்டு வந்தாலே டவுசர் கிழியும் அளவுக்கு வேலை, அதோடு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு வேறு எந்த கம்பெனிக்கும் நகர முடியாத அக்ரிமென்ட் இதெல்லாம் சேர்ந்து, ஆன்சைட் ஆசாமிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அமிஞ்சிகரைப் பேருந்து நிறுத்தத்தில், தயிர் டப்பா டப்பர்வேரோடு நிறுத்தும்!
வரலாற்றில் இன்று!
வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அலுவல்ரீதியாக நம் வாழ்க்கையையே கைமா போடும் மகத்தான நாள், தனி அறையில் மேனேஜருக்கும் நமக்கும் குடுமிப்பிடிச் சண்டை நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்... 'அப்ரைசல்’ தினம். ('ஆ’ நெடில் அல்ல... 'அ’ குறில்!)
'நீங்க நல்லாத்தான் பெர்ஃபார்ம் பண்ணீங்க... பட் உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். ஸோ, நெக்ஸ்ட் டைம் இதைவிட நல்லா ரேட்டிங் தர்றேன். உங்களுக்கு வேற பிளான் வெச்சிருக்கேன். அது உங்களால முடியும். பிகாஸ், உங்ககிட்ட ஸ்கில் இருக்கு... ஸ்கேல் இருக்கு...’ என்று சூப்பர் சிங்கர் ஜட்ஜ்போல கமென்ட்களை மேனேஜர் வழங்கிக்கொண்டிருக்க, நம் கண்களோ குங்கும நிறத்துக்கு மாறிக்கொண்டிருக்கும். மொக்கை ரேட்டிங் ஒன்றைக் கொடுத்துவிட்டு, 'இதை வெளியில யார்கிட்டயும் சொல்லிடாதீங்க...’ என்று அவர் கடைசியாகச் சொல்லும்போதுதான் 'பரதேசி’ அதர்வா போல முழங்காலிட்டு, 'நியாயமாரே...’ என வான் நோக்கிக் கதற வேண்டும்போல இருக்கும்.
ஒன் டு ஒன் நடந்த ரூமில் இருந்து வெளியே வந்தவுடன், ரெஸ்யூம் ரெடி பண்ணியே ஆக வேண்டும் என நண்பர்களிடம் நல்ல ஃபார்மெட் கேட்டு ஆலோசனைகள் நடக்கும். இன்னொரு பக்கம் 'சொம்படிப்பது எப்படி?’ என எங்காவது கோச்சிங் கிளாஸ் நடத்துகிறார்களா என்று மனம் கூகுளில் தேடச் சொல்லும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் ஒருபக்கம் இருக்க, கைவசம் வேலை இருந்தால் போதும் என்று நைட் ஷிஃப்ட், ரொட்டேஷனல் ஷிஃப்ட், கிரேவ்யார்டு ஷிஃப்ட்... என உலகத்தில் இருக்கும் அனைத்து நாட்டுக் கடிகாரங்களின் நேரப்படியும் நாம் வேலை செய்து உடம்பில் உள்ள போட்டி, தலைக்கறி, கல்லீரல், கணையம் முதலானவற்றைக் கண்டமாக்கிவிட்டு மருத்துவர்களின் அப்பாயின்மென்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருப்போம்!
சார் பேப்பர்!
'பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று ராஜினாமா கடிதம் தருவதற்கு கார்ப்பரேட் மொழியில் 'பேப்பர் போடுவது’ என்று பெயர். இந்த விஷயத்திலும் சில அவசரக்குடுக்கைகள் இருக்கின்றன. 'மேனேஜருடன் ரேப்போ சரியில்லை... கஃபேடீரியாவில் சாம்பார் சுவை இல்லை’ போன்றவற்றுக்கு எல்லாம் கோபித்துக்கொண்டு பேப்பர் போடுவதற்குப் பதிலாக, அம்மா ஆட்சியில் தரும் விலையில்லா ஆடுகளை வாங்கி மேய்க்கலாம். அதுவும் அடுத்த கம்பெனியின் ஆஃபர் லெட்டர்கூட கைவசம் இல்லாமல், அரசனை நம்பி புருஷனை விடுவது ரொம்ப ரிஸ்க். டீம் லீடருடன் வாய்க்கால் தகராறு, டீம்மேட்டுடன் காதல் கசப்பு இத்யாதிகளுக்கு எல்லாம் சால்வையைப் போத்திக்கொண்டு வெளியேறுவது அக்மார்க் முட்டாள்தனம். இதேபோன்ற பாடாவதி பிரச்னைகள் அடுத்த கம்பெனியிலும் இருந்தால், அந்த ஏரியா கவுன்சிலரிடம் சென்றா முறையிட முடியும்? வேறு வழி இல்லாமல் எவ்வளவுதான் அசிங்கப்பட்டாலும் 'எஜமான்... எஜமான்...’ என்று 'முத்து’ படத்தில் ரஜினி, சரத்பாபுவைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, விரக்தி வெடித்து, 'என்ன பெரிய வேலை?’ என்று ஆக்ரோஷத்துடன் ராஜினாமா லெட்டர் டைப் செய்துகொண்டிருக்கும்போது, அடுத்த இ.எம்.ஐ-க்கான மெசேஜ் அலர்ட் வந்து சத்குருவின் சீடர் போல நம்மை அந்தக் கணமே சாந்தப்படுத்தும்!
ஆனால், இது எதுவுமே தெரியாமல் பி.பி.ஓ./ ஐ.டி நிறுவன ஆட்கள் எல்லாம் பப், கிளப் என எப்போதும் ஜாலியாகச் சுத்துவார்கள், அனிருத் பாடலைப் பாடிக்கொண்டே ஆபீஸில் வேலை செய்வார்கள், லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்... என மங்கலான சில எண்ணங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் அதுபோன்ற சுகபோகங்கள் அமைவது இல்லை. இது புரியாமல் நம் சொந்தக்காரர்கள், குடும்பத்தார்கள் 'என்னப்பா சிவனாண்டி ஐ.டி-ல இருக்க. உன்னால இதை வாங்க முடியாதா?’ என்று சோஷியல் பிரஷரை ஏற்றிச் செல்வார்கள்.
காலவரையற்ற வேலை நேரம், முறையற்ற உணவு முறை, சீரானத் தூக்கமின்மை, டிப்ரஷன், சப்ரஷன், அப்ரஷன் போன்ற மேலும் பல 'ஷன்’கள் கார்ப்பரேட் ரோபோக்களின் வாழ்க்கையில் நடுவுல கொஞ்சம் பக்கங்களைத் தொலைப்பது யாருக்குமே தெரியாது!
(இதை... என் மேனேஜர் படிக்காமல் இருக்கணும் மாரியாத்தா!?)