ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்-13

ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்


”உலக இயற்கையில் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம் தன்னகத்தே நெருங்கப் பொதிந்து வைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்துப் புலப்படும் வண்ணம் தோற்றுவித்துப் பொருள் நிகழ்ச்சியோடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம் வயப்படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்” என்கிறார் மறைமலை அடிகள்.

பாட்டு குறித்த மேற்கண்ட இலக்கணத்தின் அடிப்படையில் இக்காலத்தில் எழுதப்படும் கவிதைகளை திறனாய்வு செய்யுங்கால் வெளியிடப்பட்ட எண்பத்தைந்து விழுக்காடு பாடல்கள் வெறும் சொற்கோர்வை என்ற பெரும் அடைப்பில் சேர்க்கப்பட்டு, “இவையும் ஓடின” என இலக்கிய வாழ்வில் இவையும் ஓடிக் கொண்டிருக்கின்ற காட்சியையே நம் மனக்கண் முன் கொண்டு வரும்.

ஒரு காட்சியை, ஒரு நிகழ்வை,, கவிதையில் வடிப்பவர், படிப்பவர் மனதில் பதிய வைக்கும்படி அமைத்தால் மட்டுமே அந்தக் காட்சியில் அழகுள்ளதா, பிரதிபலிக்கும் மனித உணர்வுகள் நம் உணர்வுகளோடு ஒத்துப்போய், இசைபட சொல்லப்பட்டுள்ளதா என்பதை அறிந்திட இயலும்.. அறிவிற்குப் புலப்படும் வகையில் இனிய ஓசை நயத்துடன் பாடலை வடிக்கும்போது மட்டுமே
எளிதில் ஒருவரால் அப்பாடலை மனனம் செய்ய இயலும். இத்தகைய இலக்கண வரம்பிற்குள் படைக்கப்பட்ட பாடலே என்றும் நின்று நிலைக்கும் அமரத்துவம் பெற இயலும். சுருங்கச் சொல்லுங்கால், எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டெண்பது தெளியப்படும். தனிப்பாடல்கள் தவிரச் செய்யுள் நூள் செய்வோர்க்கு யாப்பு நூற் புலமையுடன் பாட்டியல் நூற் புலமையும் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். பாட்டியல் நூற்புலமையில் பொருத்தங்கள் பற்றி ஏற்கெனவே விவரமாக படித்து வந்தோம் என்பதால்,
வருணப் பொருத்தம் பற்றி சென்ற பகுதியில் விளக்கப்பட்டு விட்ட நிலையில், கதிப் பொருத்தம் என்றால் என்ன என நோக்குங்கால்,

வேண்டுங் குறில்வன்மை ஈறொழித்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடின்முதனான் கந்தமொழித்—தீண்டிய
மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு

நாட்டிய ஓஒ நரலழ நல்வன்மைக்கு
ஈட்டிய வந்த மிவைவிலங்காம் – காட்டா
தொழித்த நரகர்கென் றோதினார் இன்ன
எழுத்தாகா ஆதி யிடை

என்கிறது வெண்பாப் பாட்டியல்

இதனை வினா விடையில் விளக்க வந்த சிதம்பரப் பாட்டியல்,
அ ,இ ,உ ,எ ,க, ச ,ட, த, ப, என ஒன்பது எழுத்தும் தேவர்கதி எனவும்,
ஆ ,ஈ, ஊ, ஏ, ங, ஞ, ண, ந, ம, என ஒன்பது எழுத்தும் மக்கட்கதி எனவும்
ஒ, ஓ ,ய, ர, ல, ழ ,ற, என ஏழும் விலங்கின் கதி எனவும்
ஐ, ஒள, வ, ள, ந,, என ஐந்தும் நரகர் கதி எனவும்வழங்கும்.

இவற்றுள், தேவர் கதியும் மக்கட்கதியும் நல்லன எனவும் மற்ற இரு கதியும் தீயன எனவும் கொள்க என, தேவர் மக்கள் விலங்கு நரகர் என நாங்கு வகை கதிப் பொருத்தங்களை விளக்குகிறது.

தேவர் கதியும், மக்கட் கதியும் நல்லவை என்றும் விலங்கின் கதியும் நரகர் கதியும் தீயன என்பதால், இந்தவகை கதிகள் சேர்ந்த ஒரு மகாபாரத கதை இப்போது நினைவில் கொள்ளல் நல்லதே. பாகவத புராணத்தில் எட்டாவது ஸ்கந்தமாகக் கூறப்படும் ”கஜேந்திர மோட்சம்” எனும் இக்கதையை ஸ்ரீ சுகர் எனும் முனிவர் பரீட்சித்து பேரரசனுக்குக் கூறிய ஒன்றாகும்.

பரதனுக்கும் சுமதிக்கும் பிறந்த இந்திரத்யும்னன் மிகப் பிரசித்தி பெற்ற மாளவ மன்னன் ஆவான். தான தருமங்களில் சிறந்து விளங்கிய அவன் அவந்தி பகுதியை ஆண்டு வந்தவன். இவனே பூரியின் ஜெகன்னாதர் சிலையை நிறுவியவன் எனவும் கூறப்படுகிறது. தான தருமங்களில் சிறந்து விளங்கியதைப் போலவே கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினான். அவன் செய்த பல புண்ணியங்களின் கார்ணமாக மேலுலகம் வரை சென்று வரக் கூடிய சக்தியும் அவன் படைத்து இருந்ததால் அவனுக்கு மனிதர்க்கு சாதாரணமாக வரும் அகங்காரம் தலைக்கேறி இருந்தது..

ஒருமுறை, மிகப் பிரபல கொடையாளியும் கல்வி கேள்விகளில் சிறந்தவனுமாகிய. இந்த்ரத்யும்னனைக் காண்பதற்கென அகத்திய முனிவர் அவனது அரசவைக்கு வந்தார். தன்னைக் காண வந்தவர் மாபெரும் தவ முனிவர் என்பதை அறிந்து இருந்தும், தானும் அவர்க்கு சமமானவனே எனும் அகந்தையில் எழுந்து அவரை வரவேற்காமல் இருக்கையில் இருந்தபடியே அவரை மன்னன் வரவேற்றான். கடுஞ்சினக் கொண்ட அகத்தியர், மன்னவனின் அகங்காரம் அழியாமல் இருப்பதைக் கண்டு கொண்டு கோபத்தில் அவன் அடுத்த பிறவியில் ஒரு யானையாய் பிறந்து ‘தான்’ எனும் அகந்தை அழியும் வகையில் இறைவனிடம் சரணாகதி அடைந்த பிறகே அவன் மறு பிறப்பில் முக்தி அடைய இயலும் என சபித்து விடுகிறார்.

”ஹூஹூ” எனும் கந்தர்வ மன்னன் ஒருவன் இந்திரத்யும்னனைப் போலவே தான தருமம் செய்தவன். எனினும் விளையாட்டு புத்தி கொண்டவன். தேவல முனிவர் அவனை அவனது அரசவையில் காண வந்தபோது அவரை நன்கு வரவேற்று உபசரித்தான். ஒரு நாள், முனிவரும் மன்னரும் பொய்கையில் நீராடிக் கொண்டு இருக்கும்போது, தேவல முனிவர் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு நிற்கையில், மன்னன் அவரது கால்களை விளையாட்டாய் பற்றி இழுத்து நீரில் விழச் செய்து விட்டான். இதனால் கடுங் கோபம் கொண்ட முனிவர் ஹூஹூ அடுத்த பிறவியில் ஒரு முதலையாய்ப் பிறப்பான் என சபித்து விட்டார். தனது தவறை உணர்ந்த மன்னன் முனிவரை கெஞ்சி மன்னிப்பு கேட்டபொழுது, தன்னால் சாபத்தைத் திரும்பப் பெற இயாலாதென்றும் அடுத்த பிறவியில் ஒரு பக்தனைக் காக்க விஷ்ணுவே நேராக வரும்போது அவனை மீள்பிறப்பிலிருந்து விடுதலை அளிப்பார் எனவும் உறுதியளித்தார்.

ஒரு வெயிற்கால காலை வேளையில் அழகிய திரிகூட மலையின் ரிதுமத வனத்தில் கஜேந்திரன் எனும் யானை தனது சொந்த கூட்டத்தோடு தண்ணீர் அருந்திட அருகில் இருந்த ஏரியில் இறங்கியது. ஏரியில் இருந்த முதலையொன்று, அதன் காலைக் கவ்விட உடன் வந்த யானைகள் கூட்டம் அதனை முதலை வாயினின்று விடுவிக்க எவ்வளவு போராடியும் விடுவிக்க முடியாமல் சோர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக, கஜேந்திரனை சாவு நெருங்கி வந்து விட்டது எனத் தெரிந்து விட்டதால், பிற யானைகள் ஏரியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டன. முழுபலமும் இழந்து விட்ட நிலையில், கஜேந்திரன் மகாவிஷ்ணுவை ஸ்தோத்தரித்து ஒரு கமல மலரை அர்பண மலராக நீட்டி காப்பாற்றிட அலறிய பொழுது ஓடோடி வந்த மகாவிஷ்ணு, தனது சுதர்சன சக்கரம் கொண்டு முதலையின் தலையை துண்டித்து கஜேந்திரனை விடுவித்தார். இறைவன் முன் கஜேந்திரன் தாள் பணிந்து வீழ்ந்து தாமரை மலரை நீட்டினான். அப்போது சுவர்க்கத்திற்கும் உற்தவ உலகிற்கும் அப்பால் “கைவல்யம்” இருப்பதை கஜேந்திரனாக இருந்த இந்திரத்யும்னன் புரிந்து கொண்டான். அந்நிலையில், அவனது அகங்காரம் அவனை விட்டு விலகி ஓடிட அவன் இறைவனைப்போல் ஆகி வைகுண்டம் ஏகினான்.

தன்னை விடுவிக்க இறைவனை நோக்கி கஜேந்திரன் செய்த பிரார்த்தனையே, கஜேந்திர ஸ்துதி எனும் பெயரில் மிகப் பிரபலம் ஆகி விட்டுள்ள ஸ்தோத்திரம் ஆகும். அது,

ஷூக்லாம்பரத்ரே விஷ்ணும் சஷிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ஞோபசாந்தயே

எனும் விஷ்ணுசகஸ்ர நாமம் ஆகும்.

தேவருக்கு இணையாக மேலுழகம் வரை சென்று வந்த மனிதன் ஆகிய இந்திரத்யும்னன், விலங்காகப் பிறந்தது, பின் நரகம் அனுபவித்தது ஆகிய நாங்கு கதிகளை விளக்கும் இக்கதை
மனிதர் அனைவர்க்கும் அகந்தை எனும் தீமையை விலக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு பாடமாக அமையும்.


ஒரு மனிதனுக்கு, குறிப்பாக கவிஞனுக்கு, பல்வேறு பன்முகப்பட்ட தளங்களிலிருந்து ஆத்மார்த்த உணர்வுகள் கிளறப்படுகின்றன. அப்படி கிளறப்படும் உணர்வுகள் அந்தந்த துறைகளின் பரிமாணங்களை ஏற்று வெளிப்படும்போது அவை ஒன்றையொன்று தழுவி, ஒன்று விட்ட இடத்தில் இருந்து மற்றொன்று தொடர்ந்து ஒரு மலை அருவி போல் ஓடி, ஆறாகப் பெருகி, ஒரே உணர்வுக் கடலை அடைகின்றன. இந்த உணர்வுகள் மேம்போக்காக வெவ்வேறாகத் தோன்றினாலும், அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு, தொடர்ச்சியை நீட்டி,, ஆழ் நோக்கில் ஒன்றை ஒன்று தொடுவதுபோல், ஒன்றை ஒன்று தேடுவது போல் அமையும்..

கவிஞனுக்கு, அவன் காணுகின்ற இயற்கைக் காட்சிகள் அனைத்தும், இத்தகைய உணர்ச்சிக் கடலின் கொந்தளிப்பை உள்ளுணர்வில் ஏற்படுத்துவதாலேயே அவனால் அதனை காட்சிப்படுத்த முடிகிறது. உதாரணமாக,

தூரத்து இடிமுழக்கம்,
மலை முகட்டில் வெண்பஞ்சு மேகம்,
வெள்ளி வீழ்ச்சியாக அருவி,
பொன்னிலவில் மின்னும் ஒற்றையடிப் பாதை,
மரங்களில் நிழலில் ஆண்/பெண்
கிணற்று மேடை
ஆற்றுப் பாலம்.

இந்தப் படிமங்கள், நம் உள்ளத்துள் படியும்போது நமக்குள் நாம் உணரும் இன்பச் சாரல், சில வேளைகளில் துன்ப சோர்வு, இப்படி மாறி மாறி வரும் நமது உணர்வுகளை அவை பிரதிபலிப்பவையாகவே இருக்கின்றன. இதனால்தான் காலத்துக்குக் காலம் தோன்றும் கலை, இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொரு கவிஞன், கலைஞனின், சிந்தனை, கல்வி ஆழம், அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ப இந்த இயற்கை இருப்பினை, இயல்பினைத் தொடும்
முயற்சிகளாகவே அமைந்துள்ளன. இத்தகைய அரும் முயற்சிகளில், இயற்கையோடு இயைந்த படைப்புகளில், ஒரு சிறு மழைதுளியிலும் ஒரு பனை மரம் தெரியும்.

இவ்வாறெல்லாம் கூறினால் இயற்கைக்கும், அறிவியலுக்கும், ஆன்மிக சித்தாந்தத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என நம் மூளையைக் குடையும் வண்டுக் கேள்விகட்கு உண்டு உண்டு என பதில் சொல்லிட வேண்டுமென்றே இந்தக் கட்டுரையில் ஆன்மிக வாசமும் புகுத்தி எழுதியுள்ளேன். உண்டா, உண்டா என மீண்டும் மீண்டும் கேட்டால், மாணிக்க வாசகரின் கூற்றினையே நான் கடன் வாங்கி பின்வருமாறு கூற இயலும்.

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப்பெற்றியனே”

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (14-Jul-14, 4:17 pm)
பார்வை : 197

மேலே