நள்ளிரவில் பெண்ணொருத்தி

இதோ இதில் தான்
இந்த பையில்தான் வைத்தேன்;
எங்கு போனது?
எவ்வாறு தொலைந்தது?
புது வெள்ளைத் தாளில்
பென்சிலால் எழுதிய என்
தோழியின் முகவரி – எங்கே
தொலைந்து போனது.


வலது கை எங்கென்று
இடது கை தேடிடும் – கொடிய
இருள் நிறைந்த இரவு
முகவரித் தாள் போல் இவ்வூரின்
மின்சாராமும் தொலைந்தது போலும்.


வரும் வழியெல்லாம் , எனக்காக
பேருந்தில் பாடல்பாடி வந்ததால்
கைபேசியும் களைப்பில்
அயர்ந்து அணைந்து விட்டது.


நினைவு வருகிறது இப்போது,
நாடு வழியில் பழக்கடையில்
சில ரூபாய்த் தாள்களோடு
சேர்த்து முகவரித் தாளையும்
கொடுத்து விட்டேன்.


மீண்டும் நானூறு கிலோமீட்டர்
கடந்து திரும்பிச் செல்லவியலாது ,
இந்த நள்ளிரவில் செல்வதற்கு
இக்கிராமத்தில் பேருந்தும்
உடனே கிடைக்காது – என்
ஊர் செல்லவோ
தோழி வீட்டைக் கண்டுகொள்ளவோ
தைரியமாய்க் காத்திருக்கத்தான் வேண்டும்.


துன்பமாயினும் இன்பமாயினும்
தானே உடல் பழகிக் கொள்ளும்
அதற்கேற்ப தானே மாறிவிடும்;
இருள் இப்போது பழகிவிட்டது
இருக்கும் பொருளெலாம் சற்றே தெரிகிறது
இந்தக் கல்திண்டில் அமர்ந்து கொள்கிறேன்.


அரைமணி நேரம் ஆகிவிட்டது
ஆனால் எந்த பேருந்தோ
கடக்கும் வேறு வாகனமோ
கண்ணி லிதுவரை படவில்லை ,
இதயத் துடிப்பு மெல்ல
அதிகமாய் ஆகுகின்றது
எதோ ஒரு பயம்
எங்கிருந்தோ வந்து
நாடு தொண்டையில்
நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டது.


உருவ மொன்று தெருவினில்
மெல்ல நடந்து வருகின்றது
அம்மனிதரிடம் கேட்டிடலாம்
எம் தோழியின் வீட்டினை ;
நெருங்கி வர – தெளிவாய்
உருவம் தெரிகின்றது.

ஐயோ இல்லை ,
இம்மனிதரிடம் கேட்டால்
இருக்கும் என் முகவரியும்
இல்லாமல் போய்விடும் ,
என் செய்வேன் – அவர்
தள்ளாடும் ஆட்டமே
தண்ணீரில் மூழ்கியவர்
போதைக் கென்றே
பிறந்தவர் என்று கூறுகிறதே.


என்னைப் பார்த்தே வருகிறான் ,
என்னை நெருங்கி வருகிறான் ;
ஓடி விடவா,
கல்லேதும் எடுத்தென்னைக்
காப்பாற்றிக் கொள்ளவா?
ஈரடி இடைவெளி மட்டும்
இருக்கும் அளவிற்கு வந்துவிட்டானே;
மேலே விழுகிறான் ஐயோ
மிதித்துத் தள்ளிவிடுகிறேன் அவனை
பைகளை எடுத்துக் கொண்டு
பத்திரமாய் ஓடி வந்துவிட்டேன்;
நல்லவேளை இறைவன் காப்பாற்றினார் .



என்னையே பார்க்கிறான்
என்னவோ சொல்லிக் கத்துகிறான் ,
செவி கொடுக்கிறேன் அவனுக்கு ,
“ பத்தி பொட்டி வேணும் சார் ”, என்கிறான்
போதை கொண்ட அம்மனிதன்;
ஆணென்று நினைத்து விட்டானென்னை
அதான் சாரென்று கூறுகிறான்.


என் ஆடையைக் கொண்டு
என்னை ஆண்மகனென நினைத்துவிட்டான் .
நவநாகரீக உடைகள்
கற்பிற்கு ஆபத்தென்று
எப்படிக் கூறினீர் பெரியோரே?
என் கற்பை இன்று
காத்தது அது தானே;
சேலை கட்டி வந்திருந்தால்
சிதைந்து போயிருப்பேன் நான்
மானம் காத்தது
மேலை நாட்டவன் ஆடை.


போதையில் மயங்கிக் கிடக்கும்
ஒருவனைக் கடந்தால்
இன்னொருவன் வருகிறானே
இவன் மிதிவண்டியில் வருகிறான் ,
நகை பறிப்பானோ – திருட்டு
நோக்கம் கொண்டவனோ
கொலை காரனாய் இருப்பானோ
கடத்தி யென்னை விற்றிடுவானோ.


நான் வாழவேண்டும்.
ஓடுகிறேன் என்னைக் காக்க
ஓட்டமாய் ஓடுகிறேன்
விரட்டி வருகிறான்
வேகமாய் வருகிறான்
முன்னே வந்து என்னை
மறித்து விட்டானே !
கடவுளே காப்பாற்று.

தலை சுற்றுகிறது
நிதானம் தவறுகிறது
கட்டுப் படுத்துகிறேன் மனதை
சட்டெனத் தெளிவாக முயல்கிறேன் ;
எதோ பேசுகிறான்
மிதிவண்டிக் காரன் புரியா மொழியில் ;
முகமும் உடையும் தெரிகிறது
பயம் மெல்லக் குறைகிறது
இவன் கூர்கா – வடக்கிருந்து
வந்த காவல் காரன்.


பளிச்சென வெளிச்சம் வருகிறதே !
மின்சாரம் வந்தது – தெருவின்
மின் விளக்குகள் எரிகின்றன,
வீடொன்றில் கதவு திறக்கின்றது
பெண்ணொருத்தி வருகிறாள் வெளியில் ,
அவளிடம் கேட்கிறேன்
தோழியின் வீட்டினை.


அருகில் செல்கிறேன்
முதுகினைக் காட்டியவள்
முகம் காட்டுகிறாள் ,
இது தெரிந்த முகம் ,
அவளே தான்
அது என் தோழியே தான் .

[ ‘ பெண்கள் இரவில் நகையோடு தைரியமாய் நடமாடும் பொது தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாய் அர்த்தம்’ என்றார் அம்மகான். ஆனால் இன்றும் தொடரும் பெண்களின் பயம் கலந்த கொடிய நிலையைப் பிரதிபலிப்பதே இக்கவிதை. ]

எழுதியவர் : தி.sriraamkumaar (17-Jul-14, 11:25 am)
பார்வை : 270

மேலே