அட போங்கய்யா நீங்களும் உங்க
என்னடி பாக்கியம்
ஏன் இந்த கவலை
கதிரவன் வீடு போகையில்
உன் வீடு ஏன் இருளச்சுமக்குது
பாசமா இருந்த புருஷன்
சாமிட்ட போய் சேர்ந்திட்டான்
பத்து மாதம் சுமந்த பிள்ள
வெளிநாடு போயிட்டான்
என்னை காக்க
அப்பன் கொடுத்த காணி
அப்படியே கிடக்குது
பத்து நாளா நானும் போகல
பட்டினில வாடுது
ஆயிரம் வருஷம் கண்ட சனம் நாம
இந்த வயலத்தவிர வேற எத கண்டோம்
அது சுமந்த கதிர உண்டுதானே
இந்த உடம்ப நாம வளர்த்தோம்
கோடி கோடியா மனிசன் பிறந்தாலும்
குறைக்காம கொடுக்கும் பூமி இது
கோமணம் கட்டி நாம இருந்தாலும்
கோ மானம் காத்த மண்ணு இது
இப்ப வந்த பய புள்ள
அதையும் இதையும் தட்டுது
பெட்டி ஒண்ணுக்கு முன்ன இருந்த
கால நேரம் கழிக்குது
விடிய விடிய முழிச்சி
தூக்கம் இல்லாம இருக்கிறான்
கோடிய சம்பாதிச்சி அத
பிணி தீர்க்க கொடுக்கிறான்
சொந்த பூமி விட்டு இவன்
சமுத்திரம் தாண்டி பறக்கிறான்
சொர்க்கம் எங்கு என்று அறியாம
சும்மா காசு தேடி போகிறான்
மண்வெட்டி சுமந்தாலும்
என் புருஷன் பார்க்க
மன்மதனா இருந்தாரு
இவங்க எந்தனை கிலோ குறைச்சாலும்
காத்து ஊதின பலூன் தானே
என் புள்ள மட்டும் திறமா என்ன
என்னை விட்டு போயிட்டான்
இந்தா வாறன் ஆத்தா என்று
டாடா காட்டி போயிட்டான்
கோடி காசு வந்தாலும்
இந்த புறக்கோடி காத்து தருமா
கடல் தாண்டி வாழ்ந்தாலும்
என் களிமண் தர போல வருமா
காத்து ===காற்று