காதலித்து பார்
சிசுவாக நீயிருந்தால்
கருவறையை காதல் செய்.
உதிரத்தால் உரு வளர்க்கும்
அன்னையை காதல் செய்.
உதயத்தை காணவே
களிப்புடன் காத்திருக்கும்
தந்தையை காதல் செய்.
தவழ்ந்திட துடிக்கும்
தாய் மண்ணை காதல் செய்.
தாய் மண்ணில் தவழ்ந்திடும்
தாய் மொழியை காதல் செய்.
கருவறைக் காதல் தான்
காசினியில் கல்லறைக்கே
நீண்டு வரும்.
கலங்காமல் நீயும்
கருவறைக்குள் காதல் செய்.
தாய் வயிற்றில் தளிர்த்திடும் காதல் தான்
தரணியில் நிஜமாகும்.
மழலையாய் மலர்ந்திட்டால்
மனம் நாடும் இசையினைக் காதல் செய்.
அகம் குளிரும் தாயவள்
தாலாட்டைக் காதல் செய்
காலை எழுந்தவுடன் கன்னத்தில்
முத்தமிட கட்டியணைக்கின்ற
அன்னையை காதல் செய்
பாருக்கே தந்திட்ட பாட்டியை காதல் செய்.
பாட்டனைக் காதல் செய்.
அறு சுவை சேர்த்து'அன்புடனே
அமுதூட்டஅயராது உழைக்கின்ற
தந்தையை தரணிக்கே தந்திட்ட
ஆத்தாவை காதல் செய்
அப்புவைக் காதல் செய்.
பட்டறிவு பெற்றவர்கள் பாங்குடனே வழி நடத்த
பரிவுடன் பகிர்ந்திடும்
வார்த்தைகளை காதல் செய்.
பருவத்தை எட்டிவிட்டால்
அகவை பதினாறை தொட்டிட்டால்
பக்குவமாய் காதல் செய்.
எண்ணங்கள் சிறகடிக்கும்.
ஏக்கங்கள் அதிகரிக்கும்.
உணர்வுகள் பொங்கி வரும். உள்ளங்கள் அலை பாயும்
ஆசையும் பெருகி வரும்.
அச்சமும் தூசாகும்.
வறுமையும் வலியாகும்.
பொறுமையும் கசப்பாகும்.
வாழ்வின் புதிரறிந்தே புத்தியுடன் காதல் செய்.
அனைத்துக்கும் அன்பு கொண்ட
அன்னையை காதல் செய் .............
இதை விட உன் காதல் எதுவும் இல்லை.
இவ்வுலகில் .....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]