மணமக்கள் வாழ்த்து மடல்
பூம்பொழில் சோலை தன்னிலே
வசந்த மழை பொழிவிக்கும்
மேகத்திரள் மூண்டதுபோல
திரண்டிருக்கும் உறவுக்கூட்டங்களே
வண்ண வண்ண மலர் தேனருந்தி
தேன்சுவை தன்னை அள்ளி அளிக்கும்
நட்புக் கூட்டங்களே - வாருங்கள்
மங்களம் பூண்ட நன்னாளில்
சொந்த பந்தங்கள் புடைசூழ
அன்பெனும் ஆபரணம் கொண்டும்
பண்பெனும் மாலை சூட்டி
உறவு என்னும் திலகமிட்டு
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மாமன்மார்கள் சீர் செய்ய
இன்னிசை மேளதாளங்கள் முழங்கிட
எண்ணிலடங்கா உவகையுடனே
கண்ணிலடங்கா ஆனந்த கண்ணீருடனே
பெற்றோர் ஆசீர்வதிக்க
மூன்று முடிச்சோடு தாலி கட்ட
ஈருடல் ஓருடலாய் சேரும்
வைபவமே திருமணமாம்
என்றும் புன்னகையுடனே
நீங்காத செல்வத்துடனே
வாழிய மணமக்கள்
என்றும் வாழிய வாழியவே