+பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் - 3+
கவி கொண்ட பூக்களிங்கே
கணிசமான எண்ணிக்கையில்
புவி முழுதும் பரவியிவை
மனிதரிடை கலந்திருக்கும்
வண்ண வண்ண நிறமணிந்து
கண்களுக்கு குளிரூட்டும்
வாசமெனும் குணம் சுமந்து
நாசியையும் மகிழ்வூட்டும்
சின்ன சின்ன கிராமத்திலும்
சிங்காரமாய் வீற்றிருக்கும்
நெடுந் துயர்ந்த மலைகளிலும்
தங்கியிவை குதூகலிக்கும்
பனியிதற்கு மிகப் பிடிக்கும்
கனிவுடனே வரவேற்கும்
மழை பெய்யும் நேரத்திலோ
புன்னகைத்தே நடனமிடும்
இருமையான மனித குணம்
பூக்களுக்கோ பிடிப்பதில்லை
அருமையான மனித மனம்
பூக்களையே பறிப்பதில்லை
பூக்கள் நிறைந்த தோட்டத்திலே
புத்துணர்வு நிறைந்திருக்கும்
நாள் முழுதும் பார்த்திருக்க
நோய்களுமே பறந்திருக்கும்
பூவைப் போன்ற மென்மையுடன்
பூவுலகில் வாழ்ந்திருப்போம்
பூச் சுரக்கும் தேனாகி
புன்னகைத்தே பேசிடுவோம்
பூக்கள் அடிக்கும் கொள்ளையிங்கே
மனங்களை மாத்திரமே
பூவின் குணம் கொண்டிடுதல்
வாழ்க்கையின் சூத்திரமே
பூக்கள் போல பாக்களுமே
மனிதரின் நலம்விரும்பி
பாக்களையும் பூக்க வைப்போம்
மனிதிற்குள் தமிழ்விரும்பி
பூக்கள் கொண்டு அடித்திடுவோம்
திருந்தாத ஜென்மங்களை
பூவின் வலி உணர்வாறென்றால்
கைக்குலுக்கி வாழ்த்திடுவோம்