போலிச் சாமியார்

ஒட்டிவைத்தாற் போல - இரு
இதழ்களில் பொய் இளநகை;
க(ஷ்)ட்டப்பட்டு வளர்த்துப் பின்பு
கட்டி வைத்த தலைசடை;
நெற்றியிலே நேர்த்தியாக
இட்டு வைத்த திருநீறு,
கொட்டும் பணம் அத்தனையும்
மூட்டைக் கட்டும் முழு நீசன்!!

எட்டும் சில இதிஹாச
பதிகமதின் நினைவகம்;
கட்ட ஒரு காவி வேட்டி
தலையிலொரு முண்டாசு;
கொட்டையுடன் பூமாலை
அணிந்திருக்கும் ஆளவன்,
'காற்று வரும்' 'கழுதை வரும்'
என்று கதை படிப்பானே!

வெற்று விரலிடுக்கினிலே
வெண்ணீறு கொட்டிடும்;
பத்திரமாய் வைத்திருக்கும்
"வாய்" லிங்கத் தரிசனம்;
கட்டித் தங்கம், பட்டுத் துணி
காணிக்கை ஏற்றிடும்,
வெட்டிப்பயல் பேரின் முன்னே
"ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ" பட்டமாம்!

பட்டப்பகல் வேளையிலே
பாகவதம், கீர்த்தனம்;
பட்டுநிலா ராப்பொழுதில்
சல்லாபம் மாத்திரம்;
குட்டு வெளிப்பட்டாலும்
ஆதரவிற் கரசியல்;
கெட்டிக்கார ஆளுக்கிது,
நட்டமில்லா கைத்தொழில்!

சுத்த ஞான சித்தரெல்லாம்
சத்தமின்றி அருள்வரே;
மெத்த வேஷ போலிச் சாமி
வெற்றுச் சத்த விளம்பரம்;
கற்றறிந்தும் விட்டிலாக
நாடிச்சென்று வீழ்வீரே;
அதன் பற்றறுத்துக் கொள்க....
மெச்சும் "ஆன்ம நேயம்", போதுமே!!

------------------------------------------------------------------
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (21-Jul-14, 3:10 pm)
பார்வை : 634

மேலே