மனிதம் வாழ மாநபி சொன்னார் - குமரிபையன்

இவர் மக்கத்தில் பிறந்த மாணிக்கமோ
இல்லை மண்ணிலே தவழ்ந்த முழுமதியோ
இங்கு மனிதம் வாழவோர் மார்க்கம் தந்த
இனிய மன்னர் இவரே முஹம்மத் யாரசூலே..!

தாயின் காலடியில் உன் சுவனம் உண்டென
தனயனில் தாய்மையை ஏற்றி.. அன்று
தனைகாத்த அன்னையை தான்காக்க நவின்று
தாய்மையை போற்றிய புனிதர்..!

பக்கத்துக்கு வீட்டார் பசிக்கவே புசித்தால்
பதில் சொல்ல வேண்டும் நீ நாளை... உன்
பகைவன் கேட்டால் பாவங்கள் பொறுத்து
பக்கத்தில் அணைத்து கொள் என்றார்..!

அனாதை தவிப்போர் கண்ணிலே கண்டால்
அன்பாலே கரம் பிடித்து செல்லு.... அவர்
அன்னை தந்தையரை இழந்திட்ட இதயத்தில்
அணைத்து நீ ஆறுதல் சொல்லு...!

சீனாவில் சென்றேனும் கல்விதனை கற்றுவர
சீர்மிகு உரை சொன்ன சீலர்....கல்வி
பெற்ற பின் கற்றதை பிறருக்கு ஈயவும்
பொறுமையாய் சொன்ன ஒரு தீரர்...!

மங்கையவள் கைபிடிக்க மணமகன் பொன்பணம்
“மகர்” எனும் வரதட்சணை வழங்கி...இளம்
விதைவைகள் விடைபெற மறுமணம் செய்யவும்
வித்திட்ட சமூக செம்மல்...!

ஒளிவீசும் வாட்கள் உரசுகின்ற களத்தில்
பெண்டிர் மழலை கொல்லல் பாவம்... இதை
ஒருபோதும் மீறாமல் எதிரியுடன் மோத
போர்களத்தில் போதித்த வீரர்...!

நிறுத்தல் அளவைகளில் திருடி தின்னாதே
நிச்சயம் கலப்படம் வேண்டாம்...மீறி
செய்கையில் நோயினால் அழியுமே உயிரென்று
செங்கோல்நீதி சொன்ன சிற்பி....!

சாட்சிகள் இரண்டு கொடுக்கல் வாங்கலில்
சட்டப்படி வையுங்கள் சொன்னார்... பின்
சரியாக பேணாமல் சண்டை வழக்குகளும்
சன்மார்க்க வழி இல்லை என்றார்..!

மனிதனாய் வாழவோர் மார்க்கம் தந்தவர்
மண்ணிலே வாழ்ந்த பாதை...நாம்
வழிமுறையில் நடந்து நெறிமுறையில் சென்றால்
வாழ்விலே ஆகலாம் பெருமேதை..!

எழுதியவர் : குமரி பையன் (21-Jul-14, 3:20 pm)
பார்வை : 263

சிறந்த கவிதைகள்

மேலே