பெண் என்றாலே
இன்னமும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
நான் தொலைத்த
சிரிப்பை….
எத்தனை முறை
சிந்தித்தாலும்
ஞாபகம் வரவேயில்லை
கடைசியாய் சிரித்தது;
இராமனும் லட்சுமணனும்
சேர்ந்தே துகிலுரிக்க,
கைக்கட்டி ரசிக்கிறான்
கண்ணன்;
வாய்ப்பு கிடைக்காத
துச்சாதணன்கள்
வாயிற்படியில் நமட்டு சிரிப்புடன்;
கண்ணைக் கட்டிவிட்டு
நீதி தராசில்
பணத்தை வைத்து
அழுத்திவிட்டது
அங்கியணிந்த குள்ளநரி;
செல்லரித்த புத்தகத்தில்
தேடியும் கிடைக்கவே இல்லை
கற்புக்கு உண்டான
நியாய விலை;
தற்காத்து கொள்ளாதது
என் தவறாம்……
சாயம் போன சட்டத்தால்
தீர்ப்பெழுதி போனவர்
நீதி அரசராம்….
இன்னமும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
நான் தொலைத்த
சிரிப்புடன் சேர்த்து
சுயத்தையும்…...