எனக்கு மட்டும் தெரிந்த வலி

பொன்னந்தி மாலையிலும்
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்

கவிதை என்னும் பேய் பிடித்து
ஆட்டுதடி என்னை-என்
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காண்பதில்லை உன்னை

0

தொலைபேசி அடித்தாலும்
சொந்தங்கள் சிரித்தாலும்
சுளையான பணமெல்லாம்
தொகைதொகையாய் வந்தாலும்

மூளைக்குள் அவைசென்று
முட்டுவதே இல்லை - தாய்
மொழியோடு கரைதல் போல்
முக்தி பிறிதில்லை

0

மற்றவரின் காயத்தில்
மருந்தாகும் வேளையிலும்
மற்றவரின் வேர்களுக்கு
மழையாகும் வேளையிலும்

இதற்குத்தான் தமிழென்று
எனக்குள்ளே சொல்வேன் - நான்
எவருக்கும் தெரியாமல்
கைதட்டிக் கொள்வேன்

0

கருவோடு திருவில்லை
கடவுள் செய்த அருளில்லை
குருவோடு வந்த தமிழ்
குடும்பத்துப் பொருளில்லை

காளிவந்து என் நாவில்
எழுதவில்லை சூலம் - சிறு
கடுகளவு உள்ளதெலாம்
காலம் தந்த ஞானம்!

0

முத்தத்தில் ஒதுங்கி
முடிவளர்த்த முனிவர்களும்
சத்தத்தில் பிதுங்கித்
தனிமைகண்ட கவிஞர்களும்

காடுசென்று வாழ்ந்ததற்குக்
காரணங்கள் உண்டு - என்
கவிவாழ நானுமொரு
காடுபுகல் என்று?

0

காற்றாட வனமில்லை
கால்நனைக்க நதியில்லை
நாற்றாடும் வயலில்லை
நனெழுத இடமில்லை

சகாராவில் விட்டாலும்
தமிழ்கொண்டு சேர்ப்பேன் - சுடு
தார்ச்சாலை மீதும் ஒரு
தாமரையாய்ப் பூப்பேன்

0

சத்தம் உறங்கிவிட்ட
ஜாமத்தின் மேடையிலே
புத்தம் புதுத்தலைப்பு
புத்தியிலே உதிக்கையிலே

வெண்ணிலவைப் பந்தாட
விரையுதடி எண்ணம் - இந்த
வெளிஎதிலே முடியுமென்று
விளங்கவில்லை இன்னும்

0

கண்ணீரும் வியர்வைகளும்
கல்விகளும் கலவிகளும்
மண்ணுலகை வலம் கொண்டு
வாங்கிவந்த பட்டறிவும்

எல்லாமே கவிதைக்கு
எரிபொருளாய் ஆச்சு - எனை
இயக்குவது காற்றல்ல
இலக்கியத்தின் மூச்சு

0

புவிகொண்ட ஆறுகளின்
புனல்வந்து கலந்ததனால்
கவிகொண்ட பிள்ளைமனம்
கடலாகிப் போனதடி

கவிதையென்னும் சமுத்திரத்தில்
ஆவியான மேகம் - உன்
காதோரம் ஒலிக்கின்ற
கானங்கள் ஆகும்

0

சித்தத்துக் குள்ளே
சேர்த்து வைத்த படைப்புத்தீ
ரத்தத்துக் குள்ளே
ரகசியமாய் எரியுதடி

கட்டையிலே போகையிலும்
கட்டாயம் சோதி - என்
கண்ணுக்குள் கனலுமடி
கவிதையெனும் ஜோதி

எழுதியவர் : கவியரசு (25-Jul-14, 1:37 pm)
பார்வை : 147

மேலே