கடவுளின் ஆற்றல் -- குமரி
கடவுளே..!
உந்தன் ஆற்றல்களை நான் அறிவேன்
உனை மறுப்பவர்கள் மனநிலையை யாரறிவார்..?
உருவின்றி நம்புகிறார் உள்மன அறையில்
உனை மறுப்பவரோ வெம்புகிறார் மனச்சிறையில்..!!
மலையெல்லாம் குளிரூட்டி சுகம் கொடுத்தாய் சில
மலைக்குள்ளே நெருப்பை நீ கொட்ட வைத்தாய்..!
சுட்டெரிக்கும் சூரியனை சுற்ற வைத்தாய் அதன்
சுடர் பெற்ற முழுமதியில் அதை தவிர்த்தாய்..!!
தேரில் வரும் மன்னனுக்கு கவலை வைப்பாய் - சிறு
கூரைகுள்ளே ஏழைக்கு அமைதி வைப்பாய் ..!
தேன் குடிக்கும் வண்டை நீ கிறங்க வைப்பாய்
தேனீயின் கூட்டில் மட்டும் நீ இறங்க வைப்பாய்..!!
நீ அழிப்பதில் எனக்கு ஒரு பாடம் சொன்னாய்
நீ படைப்பதில் படிப்பதற்கு அர்த்தம் சொன்னாய்..!
நொடியுலும் கண்டு நிற்க காட்சி சொன்னாய்
நெடிய உயிருக்கும் இறுதியில் முடிவை சொன்னாய்..!!
மண்ணில் பிறந்த உடலுக்கு குறைகள் வைத்தாய்
மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் வைத்தாய்
கதியென்று உன்தண்டனையை ஏற்க வைத்தாய்
வீதியில் அதை கண்டு எனை திருந்த வைத்தாய்..!!
உன்மேல் எனக்கு மிகு அச்சம் வைத்தாய் ..ஆனால்
உலகில் காணும் காட்சிகளில் இச்சை வைத்தாய்
உனை நினைத்து மறுத்தாலும் எச்சம் வைத்தாய் ..என்
உள்ளத்தில் சில ஆசைகளை மிச்சம் வைத்தாய்...!!
பெரும்பிணி தாக்கத்தை தடுத்து வைப்பாய்
பேரழிவு கொடும் சாவை காத்து நிற்பாய்
மாற்றுமத தோழமையில் காக்க வைப்பாய்
ஏற்றமிகு பாதையிலே சிறக்க வைப்பாய்..!!
நோன்பு வைத்து பசிதாகம் அறிய வைத்தாய்
மாண்புடனே பிறர் பசியை உணர வைத்தாய்
இருந்ததிலே இயன்றதை நான் ஈய வைத்தாய்
இம்மையிலே நீ அதற்கு கூலி வைத்தாய்..!!
மரணத்தின் நாள் எனக்கு தெரியவில்லை..அதனால்
வீண் செய்யும் வினாடிகளும் புரியவில்லை!
விதி வசத்தால் வாழ்வதாக எண்ணவில்லை – இறைவா
பதியான உன்னினைவோடு எனை வாழ செய்வாய்..!!
-----------------------------------------------------------------
ஈகை பெருநாள் கொண்டாடும் தோழமைகளுக்கும்
தளத்தில் நட்பை பரிமாறும் தோழமைகளுக்கும்
எனது இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்..!
--குமரி பையன்,