நட்பும் கற்று மறப்பதுவோ
புகைப்படத் தொகுப்பினை
புரட்டிப் பார்க்கையில்
புரண்டோடிப் போன காலங்கள் எல்லாம்
புதினம்போல் மனதினில் விரிந்து
நிழல் நாடகம் ஒன்றை நடத்திச் செல்கின்றது...!
நிலவினையும் விண்மீன்களையும்
பார்க்கும்பொழுதெல்லாம்
மொட்டை மாடியிலே
ஒற்றைப் பாயில் படுத்துக்கொண்டு
பரிட்சைகளுக்குப் படிக்காமல்
பல கதைகள் பேசி
அரட்டை அடித்துக்கொண்டிருந்தது
விழிகளுக்கு அப்பால் திரையோடுகின்றது...!
ஒட்டிப் பிறந்த
இரட்டையராகச்
சுற்றித் திரிந்தது ஒருகாலம்..
அதன் சுவடுகள் பதிந்த
பாதைகளைக் கடக்கையில்
நினைவுகள் எல்லாம் நிழலாடுது
இந்த நிதர்சனம் கரைந்து பின்னோடுது..!
கல்லூரிக் காலங்கள்
முடிந்திட்ட பொழுது
எங்களுக்குப் பிரிவே இல்லையென
தோள் கோர்த்து புன்னகைத்து வந்தோம்...
சுமையும் சூழலும்
பிரித்திட்ட பொழுதும்
நினைத்தால் மறுநாள்
சந்திதிடலாம் என்றோம்...
இன்று
தூரம் கூடிப் போச்சு
வேலை அதிகமாச்சு
குடும்பம் குழந்தை என்றாகிப் போச்சு
ஏனோ... அழைத்துப் பேசவே நேரமற்றுப் போச்சு...!
பல ஆண்டுகள் கடந்து
சந்திக்கும்பொழுது
கண்ணீரும் கொஞ்சம் சிரித்திட்டதே
காலம் கருதிப்
பிரிகின்றபொழுது
புன்னகையும் வாய்விட்டு அழுததுவே...!
நீ எங்கோ
ஆனந்தமாய் இருப்பதைக் கண்டு
என் மனம் பூரிப்படைகின்றது..!
உன் வாழ்க்கை
இன்னும் சுகமாக இருக்க
என் மனம் பிரார்த்தனை செய்கின்றது...!