அண்ணாமலை அருட்பதிகம்
அண்ணாமலை அருட்பதிகம்
"""""""""""""""""""""""""""""""""""""""
(1)
திங்கட் பிறைதோற்றித் திரிசடைமேல் நின்றொளிர
கங்கை யதன்மேலே சிறுகுளமாய் நின்றொழுக
மங்கை யொருபாகங் கொளமலையாய் நின்றமையும்
எங்கும் புகழண்ணா மலையானே வந்தருளே!
(2)
பொன்னார்க் கழல்மேவுந் திருவடியும் மண்புதைய
மின்னைக் குழல்கொண்டத் திருமுடியும் விண்ணுயர
முன்னர் விளையாடி முழுமுதலாய் நின்றருளும்
கொன்றை முடியண்ணா மலையானே வந்தருளே!
(மின்னை= பெண்ணை)
(3)
முத்தை யெனதன்தாய் பெயர்முதலாய் வரகவிதை
தத்தத் தெனசந்தம் தரதந்தா னுடலொழித்து
தத்தை வடிவில்வாழ் நகர்காக்குஞ் சோணேசா
சித்தை தரவண்ணா மலையானே வந்தருளே!
(4)
தண்ணீ ரணிமேவுஞ் சடைபோலே மலையாகி
வெண்ணீ றணிமேனி தனைபோலே பதியாகி
கண்ணீ ரணிமேவும் விழியுள்ளே வுறைகின்ற
மண்ணிற் கணியண்ணா மலையானே வந்தருளே!
(5)
பெண்ணுக் கருட்செய்ய வுடல்பின்னப் படநின்றெம்
கண்ணுக் கருட்செய்யக் களியாடல் தனைச்செய்தே
மண்ணிற் குடிகாத்து மனைவாழ வழிசொல்லி
எண்ணின் றுறவண்ணா மலையானே வந்தருளே!
(எண்ணின்று= எண்ணியது)
(6)
சங்கத் தமிழாலே யுனைநாளுந் தொழுதேத்த
துங்கக் குகைவாழும் நினதடியார் மனதோடு
தங்கிச் சுடரேற்றித் தகைதந்துப் புகழேற்றுங்
கங்கங் கரவண்ணா மலையானே வந்தருளே!
(கங்கம்= நெருப்பு)
(7)
பொன்னும் மணியோடுப் பொருள்வேண்டிக் குழையேனே
மன்னும் புகழுக்கே மனமேங்கித் திரியேனே
குன்னம் பிணியாதக் குறையில்லாக் குணமேவி
நன்மை தரவண்ணா மலையானே வந்தருளே!
(குன்னம்= பழி; அவமானம்)
(8)
கொல்லுங் கொடுங்கோபந் தனைகொல்லக் கருவாகும்
நல்லக் குணமுள்ளத் தினிலூறத் துணையாகும்
சொலலுஞ் செயலெல்லா முனையுள்ளும் படிவாழும்
நல்லார் தொழுமண்ணா மலையானே வந்தருளே!
(9)
நச்சை யுமிழ்கின்றக் கருநாகத் தணிசூடி
அச்சந் தரகையிற் றிரிசூலந் தனையேந்தி
உச்சந் தலைமேவும் பிறைதேயக் கூத்தாடும்
இச்சை யழியண்ணா மலையானே வந்தருளே!
(இச்சை = அஞ்ஞானம்)
(10)
கத்துங் கடற்சூழும் புவிமேலே யுனைநாளும்
சித்தங் கொளும்முத்தர்க் கருளாகி நிறைவோனே
பித்தன் னுனைவேண்டிக் கைகூப்பித் தொழுகின்றேன்
அத்தா திருவண்ணா மலையானே வந்தருளே!