யாருமில்லாத் தீவில் நான் oo0oo சொசாந்தி

யாருமில்லாத் தீவில் நான்....
===========================
திரும்பிய திசையெல்லாம்
கண்ணனவன் வண்ணமடா
நீலவானம் நீண்ட கடல்
நிலம் மட்டும் கொஞ்சமடா!!!
ஆதவனும் காலையிலே
நீராடல் ஆழியிலே
அழகு காட்சி வெட்டவெளி
நெஞ்சம் கொள்ளை கொள்ளுதடா !!!
தொடுவானம் தூரத்திலே
ஆழியொடு ஆலிங்கனம்
அண்டவெளி திரையினிலே
கண்கொள்ளா காட்சியடா!!!
வெண்பஞ்சு மேகமெல்லாம்
ஆழிக்குள்ளே மூழ்குதடா
மேகம் முத்தெடுத்து மேலெழுந்து
ஊர்கோலம் போகுதடா!!!
ஆர்ப்பரிக்கும் நீலக்கடல்
நானும் தொட ஆசைப்பட
அலை ஓடிவந்து பாதம் தொட்டு
முத்தமிட்டு செல்லுதடா!!!
தூசியில்லை மாசுமில்லை
சனம் இல்லை சண்டையில்லை
மதங்கொண்ட பேய்களில்லை
துன்பம் கூட இல்லையில்லை !!!
செய்தபணி போதுமென்று
கதிரவனை வழியனுப்பி
வெண்ணிலவும் விண்மீனும்
தம் பணியும் துவங்குதடா ..!!!
யாருமில்லாத் தீவினிலே
நான்மட்டும் தனிமையிலே
இருள்சூழ்ந்து கொள்ளுதடா
பயம் வந்து அள்ளுதடா ..!!!
உறவில்லா தீவினிலே
தனித்திருக்க பிடிக்கவில்லை
சொந்த பந்தம் சேர்ந்துவிட்டால்
சொர்க்கம்.. சொர்க்கம்.. சொர்க்கமடா!!!