அவள் அப்படித்தான் -திருமதி சியாமளா ராஜசேகர் எழுதிய சிறுகதை திறனாய்வுப் போட்டி

”அவள் அப்படித்தான்”-- சியாமளா ராஜசேகர் எழுதிய கதையின் திறனாய்வு.

,
படைப்புக்கள் , மகிழ்ச்சியைப் பேசுவதை விட பெரும்பான்மையாக துன்பத்தையும் வலிகளையும் பேசும்பொழுதே அவை கூடுதல் கலைத்தன்மை கொண்டவையாக அமைகின்றன. எல்லோராலும் பாராட்டப் பெறுகின்|றன.

வாழ்க்கை நிகழ்வுகளில், எங்கெங்கோ உதிரியாய் திரியும் சிலர் நம் மனதில் அவர்கள் விருப்பமின்றியே தம் பெயரைப் பதிக்கின்றனர்.. அவ்வாறு பதிப்பதோடு நின்று விட்டால், நாளடைவில் மறந்துபோகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், ஏதொ ஒரு கால கட்டத்தில், நமது வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்களில் அவர்கள் பங்கு கொள்ளும்போது நம் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகின்றனர் எனும் பேருண்மையை விளக்குகிறது ”அவள் இப்படித்தான்” எனும் இச்சிறுகதை.


.கதையின் ஆரம்பத்திலேயே கதைக்கான காலமும் களமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வெறுமனே காலத்தைக் காட்டும் கண்ணாடியாக இல்லாமல் சிருஷ்டியின் சுழற்சியில் பிரக்ஞையின் விரல் நுனி சுட்டிட முடியாத மர்மங்களை தனக்கே உரிய பாணியில் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார். கதை இவ்வாறு தொடங்குகிறது.

“கார்மேகம் திரண்டிருந்தது வானத்தில் ! சில்லென்று குளிர்காற்று வீசியது . சடசடவென தூர ஆரம்பித்து சற்று நேரத்தில் ஜோராக கொட்டியது மழை . பவானியும் அவள் அம்மா சாரதாவும் ஜன்னலைத் திறந்து வைத்து மழையை ரசித்துக் கொண்டிருந்தனர் . பவானி கைகளை வெளியே நீட்டி மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்தாள்:

இந்த ஒரு காட்சியிலேயே, மனிதர்கள், வாழ்க்கை, கனவுகள், துயரங்கள், அழகு அத்தனையும் படிமங்களாக சேர்த்தழைத்துக் கொண்டு திரை விலகுகிறது. அகத்தில் புரளும் உணர்ச்சிப் பெருக்கு மழையில் கை நீட்டி விளையாடும் சிறு பிள்ளையின் மனோ பாவம், காட்சியைப் பற்றிய எழுத்தில் வடிக்கப்பட்டு பவானி எனும் பெயர் கொண்ட அந்த மகளின் குணச் சித்திரத்தையும் தொடர்ந்து வரும் வரிகள் ஆதுரம் மிக்க தாயின் குணச் சித்திரத்தையும் கையோடு பிட்டு வைக்கின்றன. ..


அடுத்ததாக நம் கண் முன் வருகிறாள் கதையின் நாயகி

“அந்த ஜோல்னா பை ....அது அவ தோள்ல இருந்து கீழ எறங்கவே எறங்காது ....அப்படி கனமா என்னதான் வச்சிருப்பாளோ தெரியல ....!!"

எனும் வரிகள், வருவது உரைக்கும் வரிகளாய் வந்து, ஒரு மர்மத்தை வாசிப்பவர் மனதில் விதைத்து விடுகிறது. இறுதியில் எதிரியைத் தாக்கும் ஆயுதமாய் அது மாறியதைப் படிக்கும்போது, ஒவ்வொரு பொருளின் தேவையும் முன்கூட்டியே யோசித்து கதை அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது..

எதார்த்த தளத்திலும், கனவும் கற்பனையும் குழைந்து புனைவுத் தளத்திலும் சரிசமமான அளவில் படைக்கப்பட்ட இக்கதை வெளிப்படுத்திக் காட்டும் புற உலகம் பெரும்பாலும் நம் பார்வையில் நித்தமும் படக்கூடிய ஒன்றேயாகும். பழகிய இடங்களைப் பற்றிய குறைவான வரிகளிலேயே இடம் சார்ந்த குறிப்புகள் தரப்பட்டு கதையின் களம் அமைக்கப்பட்டு விடுகிறது. கதைத் தளத்தினை அழுத்தமாய் நிறுவிட முயலாமல் கதை மாந்தர்கள் நெஞ்சுக்குள் நுழைந்திடத் தேவையான முயற்சிகட்கு அதிக அழுத்தம் தருவதில் ஆர்வமுடன் இக்கதை இயக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

என் சுடிதார் எத்தன இருக்கு ....எடுத்து கொடுக்கறதுதானம்மா ....?" தாயைப்போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்பதைப் போல், மகளின் மனதை அறிந்த அந்தத் தாய், எதையும் ஆழ்ந்து உணர்வதோடு உணரவும் வைக்கும் தாயாக ’சாரதா’ எனும் கதா பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது. .


. மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண், மன ஆரோக்கியம் நிறைந்த ஒரு பெண்ணின் கற்புக்கு களங்கம் ஏற்படாமல் காத்து நிற்கும்போது அவளை தங்கையாக ஏற்றுக் கொள்ளும் மனித மாண்பு பற்றிய இச்சிறுகதை மிகச் சிக்கனமான மொழியில் பக்குவமாய் நமக்குப் போதிக்கிறது. அறிந்தோ அறியாமலோ நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் பின்னாளில் ஒரு பெரு நன்மையாக நமக்கு வந்து சேரும் எனச் சொல்லாமல் சொல்கிறது.

”இதெல்லாம் ஒன்றும் கண்டு கொள்ளாமல் வெளியே போவதிலேயே குறியாய் இருந்தாள் பேபி” எனும் இறுதி வரிகள், நாயகியின் ’அவள் அப்படித்தான்’ எனும் குணாதிசயத்திற்கு மகுடம் சூடும் மொழிகளாக அமைந்துள்ளன.

இக்கதை ஒரே நேர்க்கோட்டுத் தன்மை கொண்டு சிக்கல்களோ சிடுக்கல்களோ இன்றி செவ்வையான பாதையில் பயணிக்கிறது.. ஒரு நாவலுக்கான கூறுகளைக் கொண்டிருப்பதாகவே மிளிர்கிறது.. இதில் கதை மாந்தர்களின் குணக்கூறுகள் தாம் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப கூடுதல் கவனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

.
சித்தரிப்பின் துல்லியம், பூவின் இதழ் விரிவதுபோல் கதை இயல்பாய் வெளிப்படும் போக்கு, நுட்பமான அவதானிப்புக்கள், கூர்மையும் ரசனையும் கொண்ட மொழி, சொல்லாமலே உணர்த்தும் திறன், வாழ்வின் நோக்கம் குறித்த விசாரணையினைத் தூண்டி விடும் தன்மை, சிறுகதை இலக்கியத்திற்கு உதாரணம் கூறத்தக்க உருவ அமைதி, எல்லாவற்றிற்கும் மேல், சுவையான சலிப்பில்லாத வாசிப்பை சாத்தியமாக்கும் கூறல் முறை ஆகியவை இக்கதையின் வலுவான அம்சங்களாக விளங்குகின்றன.


மறைந்த பெண் எழுத்தாளர்கள் ஆகிய அனுராதா ரமணன், லஷ்மி போன்றோரை நினைவுபடுத்தும் வகையில் பெண்மையின் உணர்வுகளையும், பகிரும் பெருந்தன்மைகளையும் மாண்புகளையும் வெளிப்படுத்தும் இச்சிறுகதை திருமதி சியாமளா ராஜசேகர் அவர்கட்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதால் அவர்கட்கு நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்து கூறலாம்.




.

எழுதியவர் : தா. ஜோ. ஜுலியஸ். (28-Jul-14, 2:44 pm)
பார்வை : 232

மேலே