யார் அந்த ஆளு பாகம் ஒன்று

யார் அந்த ஆளு ?

அரண்மனை அந்தப்புரத் தோட்டம்.

எழில் மனையில் இருக்கை கொள்ளாமல் ஏதோ சிந்தித்தவண்ணம் மன்னர் அமர்ந்திருக்க, அந்நேரம் மன்னர் அருகில் வந்து நின்றாள் ராணி.

ராணி வந்திருப்பது கூடத் தெரியவில்லை மன்னருக்கு.

கரத்தில் பிடித்திருந்த மயில்பீலியால் மன்னரின் காதில் தடவியபடிக்கு, “நான் வந்திருப்பது கூடத் தெரியாமால் அப்படியென்ன ஆலோசனையோ” என்று கேட்கவும், ராணியைப் பார்த்து,

“ஆம் .. தேவி .. சிந்திக்கவேண்டிய வேளை வந்து விட்டது” என்றார்.

“எதைப் பற்றி” ?

“சற்று நேரம் முன்பு தான் மந்திரியார் ஒரு செய்தியை கூறிவிட்டுச் சென்றார்”.

“என்ன செய்தியோ” ?

“அதை என் நாவால் எப்படிச் சொல்லுவதென்றே தெரியவில்லை .. தேவி”.

“அப்படியென்ன செய்தி. சொல்லுங்கள் மன்னரே” !

“அமைதிப் பூங்காவாய் இருக்கும் நம் நாட்டில், சில விஷமிகள் வேறு சிலரைப் பற்றி மக்களிடையே அவதூறு கிளப்பிவிடுகிறார்களாம். மக்களும் அதை எல்லாம் நம்பி விடுகிறார்களாம். அது மட்டுமின்றி, அவ்வாறு அவதூறுக்கு ஆளாகியவர்களைக் கண்டால் மதிப்பது இல்லையாம். அவதூறுக்கு ஆளாகியவர்கள் மனமுடைந்து போயிருக்கிறார்களாம். மன்னரை நேரில் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களாம்”

"ஓ .. யாரந்த விஷமிகள்" ?

"யாரென்று உறுதியாகச் சொல்வதற்கில்லை என்கிறார் மந்திரியார்"

"ஓ .. படித்தவர்களா .. பாமரர்களா" ?

"படித்தவர்கள் தான் படித்த சிலர் மீது இவ்வாறு அவதூறு கூறுவதாக மந்தியார் சந்தேகிக்கிறார்".

"மந்திரியார் சந்தேகப்படும் அனைவரும் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கவிதை மழை பொழிபவர்கள். அவர்களால் நம் நாட்டிற்கு மிகுந்த பேரும் புகழும் கிடைத்திருக்கிறது. அவர்களில் ஒருவரோ, ஒரிருவரோ அல்லது அனைவரும் இணைந்தோ இவ்வாறு சதித் திட்டம் செய்திருக்கக் கூடும் என்பது மந்திரியாரின் வாதம்".

"அவதூறுக்கு ஆளாகியவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அற்பர்கள் போல் மகிழ்ச்சி கொள்கிறார்களாம் அந்த விஷமிகள் "

"அப்படியா .. அவதூறு கூறுபவர்கள் இளைஞர்களா .. பெரியவர்களா"?

"பெரியவர்கள் தான்"

"அதாவது பெரியவர்கள் என்றால் அனுபவசாலிகள் என்று தானே அர்த்தம் .. மன்னரே " !

"ஆம் தேவி"

"ஆண்களா .. பெண்களா"? "

"பெண் கவிகளும் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள் .. ஆனால் மந்திரிக்கு பெண்கள் மீது சந்தேகம் இல்லை"

"அதாவது அவதூறு கிளப்பிவிடுபவர்களை விட அவதூறுக்கு ஆளாகிறவர்களின் செல்வாக்கு மக்களிடையே மிகுந்து இருக்கவேண்டும். விஷமிகளுக்கு அந்த மற்றவர்கள் மீது இருக்கும் பொறாமை குணமே இதற்குக் காரணம் என்று தெரிகிறதே மன்னரே" !

"ஆம் தேவி .. உன் கூற்றில் உண்மை தெரிகிறது". "ஆனால் வெள்ளை செம்மறி ஆடுகளின் நடுவே இருக்கும் அந்தக் கருப்பு ஆடுகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்".

"கவலையை விடுங்கள் மன்னரே ! அதற்கு என்னிடம் ஒரு யுக்தி இருக்கிறது. சொல்லவா"

"சொல் .. என் கண்மணி"

தொடரும் ..

எழுதியவர் : (27-Jul-14, 6:57 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 123

மேலே