அழகுஅழகு
அழகு! அழகு!
அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..
அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமேயாகும்.
அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதேயாகும்.
அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் உண்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட தர்மம் ஆகும்.
அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் ஆகும்.
அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த அறிவும் தெளியுமானால்.
பின்விளைவதுவும் முன்னறிவானால்
பேணும் தாமதம் பொன்னறிவாகும்.
அழகு அழகு அமைதி அழகு.
அறிவது ஊறும் ஆறதுவானால்.
விலகும் வேண்டா தீவினையதனால்
நிலவும் அமைதி நெறிமுறையாகும்.
அழகு அழகு சமூகம் அழகு.
பழகும் உறவு பண்புள்ளதானால்.
வரவும் செலவும் வகை சரியானால்.
வாய்க்கும் சமூகம் வாய்மையாகும்.
அழகு அழகு அரசியல் அழகு.
அறமென மேவும் அரசியலானால்.
சுயநலம் பொய்யும் சூத்திரமானால்
பொதுநல அரசியல் வர்த்தகமாகும்.
அழகு அழகு நாகரிகம் அழகு.
பழகிய அவரவர் ஒழுக்கமானால்.
அவரவர் நடைமுறை அதுவேயானால்
பழக்கம் நாகரிகப் பண்பேயாகும்.
அழகு அழகு குடும்பம் அழகு.
அமைந்த இடங்கள் ஊரும் நாடானால்
பழகப் பழக உரிமை அதுவானால்
பரவும் குடும்பம் உறவாகும். .
அழகு அழகு மொழியும் அழகு.
அவரவர் கூட்டம் ஒலிமுறையானால்.
தகவல் சாதனம் என்பதேயானால்
தாராளம் கற்க மொழிகளாகும்.
அழகு அழகு மதமும் அழகு.
அறிவின் நெறியாய் அதுவாகுமானால்.
சத்தியம் ஒன்றே உத்தமமானால்
சந்நிதானம் மனமே மதமாகும்.
அழகு அழகு மனிதம் அழகு.
ஆறறிவுடன் அவனாய் வாழ்ந்தால்.
ஆதியும் அந்தமும் அவனறிவானால்
நீதியில் மனிதம் நிறைவதாகும்.
அழகு அழகு கவிதை அழகு.
ஆக்கம் சொல்லும் அழகு மொழியால்.
உள்ளம் பதியும் தன்மையதனால்
வெல்லும் கவிதை அழகாகும்
கொ.பெ.பி.அய்யா.