தடைகளை உடை

தோல்வியின் முகங்காண மறுப்பவனுக்கு – என்றும்
துன்பங்கள் அகலாத தொடர்கதையே– தினம்
போராடித் தடைகடந்து வாழ்பவனுக்கு – எந்தப்
பெருஞ்சுமையும் சுகமான விடுகதையே!
வேடிக்கை பார்ப்பவருக்குக் கிட்டாது - வெற்றி
அழுது புலம்புபவருக்கு எட்டாது – வரும்
வேதனையை வென்று நிற்பவருக்கே - நித்தம்
வெற்றி வாய்ப்புகள் வசப்படுமே!
ஆயிரம் தடைகள் எதிர்ப்படினும் – துயர்
அடுத்தடுத்து வந்துனக்கு இடர்தரினும்- எல்லாம்
ஆதவன்முன் பனிபோல் மறைந்திடுமே - நீயும்
சாதிக்கும் இலக்கை மனங்கொண்டால்!
சோதனையைத் தாண்டி வருவதில்தான் - என்றும்
சாதனையின் மகத்துவம் அடங்கிடுமே – செல்லும்
பாதையில் இடைவரும் தடைக்கல்லை – வாழ்வின்
படிக்கல்லாய் மாற்றி முன்னேறுவாய்!