பட்டினிச் சாவு-----அஹமது அலி-----

பார்வையின் எதிர் திசையில்
பாயும் ஈட்டிகளென
நேர் நோக்கிய பார்வையை
கூராக்கிக் கொல்கிறது காட்சி.!
0
பார்க்கத் திராணியற்று
இமைகளும் இறுக மூட
இதயமது இறுகிட முடியாது
இளகிக் குழைகிறது!
0
இமையிதழ்கள் மெல்ல
கண்ணீர் பிழிந்து
கண்ணத்தில் பாய்ச்சி
கருணை சுரக்கிறது.!
0
ஓரிரு நொடிகள்
உணர்வற்று உயிர்தாங்கி
உயிர்தாங்கியதால் மீண்டு
உணர்வுற்று உயிர் உருக்குலைகிறது.!
0
பார்வையை சபித்து
பரிதவிப்பில் துடித்து
பாவஞ் சுமந்து உயிரும்
பழியேற்கிறது.!
0
பட்டினிச் சாவை
பாரை விட்டும் விரட்டிட
பகர்ந்துண்ணும் பன்பில்
பங்கெனது என்னவென கேட்கிறது.!
0
வறுமையறிந்து பசியுணர்ந்து
வறியவர்க்கீந்து பசியோடு
பட்டினிப் போரட்டத்தில் பங்கெடுக்கும்
பாங்கு எங்கே என்று.!
0
தர்மம் செழித்து
சமதர்மம் நிலைத்து
வறுமைக் கோடழிக்கும்
வளமான ஆயுதம் உணர்கவென்று.!
0
வேடிக்கை மனிதரின்
மிருக குணத்தால்
பிஞ்சொன்று இரையான
கொடுஞ்செயல் வதைக்கிறது.!
0
பஞ்சங்கள் பஞ்சாய் பறந்திட
பட்டினிச் சாவை சாகடிக்க
கட்டாய தர்மம் சட்டமாக
கட்டாயக் குரல் எழுக.!
0
அண்டை அயலார் பசித்திருக்க
தானுண்டு கொழுத்து
நோய் வாங்கும் நோய்க்கு
மருந்து ஈகையுள்ளமே!
0
ஈகையை ஈந்திங்கு
ஈனம் துடைத்தொழித்து
ஈடேற்றம் பெறச் செய்யும்
ஈமான் வென்று வாழ்க மனிதமே!


ஈமான்=கொள்கை
....................................................................................
குறிப்பு;
மேலே உள்ள படம் கண்டு முதலில் எண்ணமொன்றை பதிந்தேன். எண்ணம் பதிந்தும் என் எண்ணம் தவித்து துடித்ததால் இப்படைப்பையும் பதிகிறேன்.

படக் காட்சி குறிப்பு;
இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற சில நாட்களில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (6-Aug-14, 8:35 am)
பார்வை : 209

மேலே