அமரர் சுசீலாமணி நினைவுக் கவிதைப் போட்டி

உன் விரலுக்குள் என் வாழ்வு
என் நடை வண்டி நீ
கரிசனக் களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்

எல்லாமும் ஆகி என்னுள்
சொல்லாமலே ஊடுருவி என்றும்
நில்லென்று என்னை நிறுத்தி
நல்லன செய்ய வைப்பாய்

நீளக் கடலின் ஆழ் தெளிவில்
பொக்கிஷம் தேடி நான் நீந்த
ஓலமேன் இழந்தது ஒன்றுமில்லை
இருப்பதே போதுமென உரைப்பாய்

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி
ஒரு பூ பூக்கும் என்றால்
நீ வைக்கும் தோட்டத்திலே
ஓராயிரம் பூக்க வைப்பாய்

உன் பேச்சினைக் கேட்டிடவே
என் காதுகள் நச்சரிக்க
குறைந்த நற் சொற்களையே
உன் வாய்வழி உச்சரிப்பாய்

இப்போதும் கோவிலில் தெய்வங்கள்
எப்போதும் போலவே இருக்கின்றன
‘சப்பாணி’ என்று அவற்றை திட்டிட எழும்
தப்பான ஆசையை நீ தடுக்கிறாய்

நீயேயொரு தெய்வ மென்றான பின்
பாயுமொளி நீ எனக்குத் தா
சாயும் வரை காத்து இருக்கின்றேன்
கண்களின் நீருடன் உனக்கே உனக்காய்
மாடத்தில் தூங்கா விளக்காய்
வாடா மலர்களில் வண்ண எழிலாய்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (10-Aug-14, 2:43 pm)
பார்வை : 135

மேலே