உயிர் காக்கும் மருந்தே உயிர் போக்கும் மருந்தோ

உயிர் காக்கும் மருந்தே ! உயிர் போக்கும் மருந்தோ ?
~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆட்கொண்ட விதியோ?
ஆளைக்கொல்லும் சதியோ ?
அதோகதியோ ? இல்லை அதுதான் கதியோ?
அவதிக்கு கதியாக்கும் சதியோ?

நவீனம் நம்மை பலவீனமாக்கி
வீதிகளில் வியாதிகளின் வியாபாரம்
யோக்கியமற்ற மனிதத்தில் - அயோக்கியம்
ஆரோக்கியமாய் அமோகவிற்பனையில்

கோடிக்கு விலை போகும் போலிகள்
போலிக்கு பலியாகும் கோடிகள்
போலிக்கு வேலியிட்டும்
வேலிதாண்டும் போலிகள்

அரசின் அலட்சியத்தால்
அந்நியரின் மூலதனம் அனுமதித்து
இந்தியரின் மூளையை தானமாக்கும்
தாராளமயக் கொள்கை

பெயரறியா மருந்திற்கு
புரியாத மொழி எழுதி
மருத்துவரும் பரிந்துரைப்பார்
பக்கவிளைவுகளோடு பக்காவிலையில்

மருத்துவரின் பரிந்துரையில்
நோய் தீர மருந்தில்லை
திறனில்லா மருந்திற்கு
திரைகளிலே விளம்பரங்கள்

தரமான மருந்துகளை தரமறுக்கும் தாய்நாடு
தரமற்ற மருந்துகளை தாரை வார்க்கும் நம்நாடு
தரமறியா மருந்துக்கு இரையாகி
பெயரறியா மருந்துக்கு பலியாகும் மக்கள்

உடற்பிணி ஒன்று தீர
உட்கொண்ட மருந்தோ
உபாதைகள் ஒன்பதாக்கி
உயிரைப்பறிக்கும் பரிதாபம்

நடவடிக்கை எடுக்க மறுத்து
வேடிக்கை பார்க்கும் அரசு
வழியின்றி வாடிக்கையாய்
வேடிக்கை பார்க்கும் மக்கள்

தேசம் காக்கும் போர்வீரன்
எல்லையிலே காத்து நிற்க
உயிர் காக்கும் மருந்தை ஆயுதமாக்கி
உயிரை அழிக்கும் ஆயுதப்போர்

நித்திரையை தொலைத்து நாம்
நித்தம் நித்தம் சாகின்றோம் – இது
தனிமனித சேதமில்லை
தேசத்தின் சேதமன்றோ ?

வாய் மூடி கைகட்டி
வாழ்ந்தது போதும்
கரம் உயர்த்தி வாரீர்! - தோழா
தரம் உயர்த்தக் குரல் கொடுப்போம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
கவிஞர் (அ.சு )

எழுதியவர் : கவிஞர் – (அ.சு ) அழகர்சாமி , (11-Aug-14, 9:55 am)
பார்வை : 681

மேலே