எனது இந்தியா - குமரி

இங்கே சுதந்திரம் எதற்காக..?
இங்கிலீஸ் காரன் தந்தானோ..?
இருட்டில் தந்தான் அவனம்மா
இருவிழி திறந்தேன் இல்லையம்மா..!

இந்திய மாநிலம் ஒவ்வொன்றும்
இரண்டிரண்டாய் பிரிகிறதே..!
இறுதியில் பிரிந்தது ஆந்திராவும்
அடுத்து வரிசையில் உ.பியும்..!
மராட்டியர் மட்டும் ம.பியாம்
தெலுங்கர் உரிமை தெலுங்கானா..!
அஸ்ஸாம் சொந்தம் அவர்களுக்கு
அருணாச்சல் பகுதி யாருக்காம்..!
மணிப்பூர் மாநிலம் மைந்தருக்காம்.
நாகம் வேண்டி மாவோயிஸ்ட் .
பஞ்சாப் இன்றும் நெருப்பாக
பக்கத்தில் தமிழும் நிற்கிறதே..!

நதிநீர் நமக்கு சொந்தமில்லை
மறுமாநிலம் நமக்கு பந்தமில்லை..!
கேரளா காரன் பெரியாரை
கேவி கேட்டும் தரவில்லை..!
காவிரி கேட்டல் கர்நாடகம்
தலைவிரி கோலம் ஆடுதம்மா..!
கிருஷ்ணா பகவான் வந்தாலும்
கிருஷ்ணா நீர் கிடைக்காது...!
தண்ணீர் கடலில் கலந்தாலும்
தாகம் தீர்க்க தரமாட்டார்..!

வீணாய் போன விதை விதைத்து
விளை நிலங்கள் மடியுதம்மா..!
விதைகள் இல்லா விவசாயம்
வீரியம் என்று பெயரிட்டு
வினை நிலங்கள் முளைக்குதம்மா !
வியர்வை சிந்தும் விவசாயி
விதியாய் குடிக்கிறான் விஷமம்மா
விழுகிறான் மனிதன் நோயிலம்மா
வீதியில் எங்கும் ஓலமம்மா..!

விலை வாசிகள் எகிறுதம்மா
விண்ணை முட்டி நிக்குதம்மா
ஏழை ஜனங்கள் பெருகுதம்மா
எங்கள் ஆட்சி உங்கள் ஆட்சி
எல்லாம் லஞ்சம் ஊழலாட்சி.
குறைகள் மட்டும் சொல்லுதம்மா
மக்கள் ஆட்சி எங்கேயம்மா..?
மாக்களாய் காட்சி கண்டேனம்மா..!

தமிழன் வடிக்கும் கண்ணீரை
இந்திய கண்கள் காணவில்லை
எல்லையில் பிடிக்கும் மீன்களைபோல்
கொல்லையில் பிடித்து செல்கின்றான்..!
கடிதம் எழுதும் தலைவர்கள்
கண்டனம் சொல்லும் போஸ்ட்டர்கள்
இறந்தவன் உடலை மீட்டிடுமா..?
இருப்பவர் கடலில் காத்திடுமா..?

சுதந்திரம் வேண்டி போராடிய
சூரர் கூட்டம் சூழ்ச்சிகளால்
தீவிரவாதி பட்டம் இங்கே..!
நீதியும் சட்டமும் தூங்குதிங்கே..!
மந்திரம் ஓதும் தந்திரத்தில்
நிரந்தரம் சூத்திரம் வெல்லுதம்மா..!
நித்தமும் செத்து மடியுதம்மா
நிரபராதிகள் அழியுதம்மா...!

கஸ்மீர் தொலைந்த சொர்கமாக்கி
நஷ்டங்கள் மட்டுமே சொந்தமாக்கி
கஷ்ட்டங்கள் மக்கள் சொத்துமாக்கி
இஷ்டங்கள் எல்லாம் மந்தமாக்கி...
வறுமை கோட்டை பெரிதாக்கி
வளமான நாட்டை விலையாக்கி
சுவிஸ் வங்கியில் காசாக்கி
நீளுதே சுதந்திர (இந்திய) வரலாறு..!

இருட்டில் கொடுத்தான் இங்கிலீஸ்காரன்
சுருட்டி எடுத்தவன் இந்தியாகாரன்
சுரண்டி சுரண்டி சூடுகாடாக்கி
சுகமாய் வாழ இடுகாடாக்கி
சுந்தர அரசியல் விளையாட்டாக்கி
மதத்தை இனத்தை மொழியையடுக்கி
மனிதம் கொன்று மிருகம் வென்று
அரசியல் செய்யும் அசிங்கமம்மா..!
அடிமை சுதந்திரம் எதற்கு அம்மா..?

கொடிகள் மட்டும் கையிலம்மா..
கோடிகள் அவர்கள் பையிலம்மா...!
கேடிகள் ஆட்சி வரிசையம்மா
சாடினால் வாழ்க்கை சிறையிலம்மா..!
தேடினேன் இந்தியன் மெய்யிலம்மா
மொழிவெறி மட்டுமே இருக்குதம்மா
இந்தியன் எங்கும் இல்லையம்மா
ஓடினேன் இறுதியில் கண்டேனம்மா..
பேதங்கள் இன்றி ஒருமையம்மா
பேரிடர் அகதிகள் முகாமிலம்மா..!

================================================
நமது தேசத்தின் இன்றைய எதார்த்த நிலைமையை
எடுத்து சொல்லவே இந்த பதிவு..!

இந்திய மைந்தர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
"ஜெய் ஹிந்த்"
--குமரி

எழுதியவர் : குமரி பையன் (15-Aug-14, 12:05 am)
பார்வை : 1264

சிறந்த கவிதைகள்

மேலே