உரிமை நாள்
உரிமை நாள்!
வெந்தணல் பூத்த விளைவாயெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ்சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளையரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.
இந்தியக் கண்டம் இந்தியாவென்று—புதிய
இரண்டாம் பிறப்பு நாளின்று.
இன்றுன் வயதும் அறுபத்தேழோ!—இளமை
இந்தியத் தாயே நீ வாழ்க!
கருணைக் கடலெனச் சிறந்தன்று—இயற்கை
அருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமைக் குரலது உயிரெனக்கொண்டு—துடிக்கும்
உதிரம் கொட்டியும் ஒலித்தாய்நின்று..
தாயே என்னும் பந்தமுண்டு—அன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்று—பண்பின்
பெருமை சொன்னது நீயென்று...
புரட்சி என்றொரு சொல்லுண்டு—அதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
வளர்ச்சி என்ற முயற்சிகொண்டு—ஒற்றுமை
வலிமை பெற்றதால் பலனுண்டு.
சுதந்திரம் முயன்று பெற்றதுண்டு—அதுவே
சுயநல வளற்சி ஆனதின்று.
ஜனநாயகம் அதுதான் உயிரென்று—உலகின்
சரித்திர அடையாளம் போனதின்று..
பொதுவாழ் வென்ற பேச்சுண்டு—ஆனாலது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டு—சாணக்ய
அர்த்த சாஸ்திரம் எதிர்கொண்டு.
அரசியலொரு தர்ம மென்று—ஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அந்த அரசியல் வணிகமென்று—அய்யோ
அழகு மாறிப் போனதின்று.
நவயுகம் வார்த்தை நலமுண்டு—அதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்று—கணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று.
காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டு—அவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதநாடும் ஒருநாள் ஆவதுண்டு.—அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.
வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.
எனக்கும் கூடஓர் ஆசையுண்டு—அதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டு—அந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
.
கொ.பெ.பி.அய்யா.
புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழி)
அடக்கம் அமைதி அழகுதான் ஆனால்
அடங்கி அடிமை பழகாதே!—தூய
ஒழுக்கம் பழக்கம் உயர்வுதான் ஆனால்
ஒடுங்கும் உரிமையால் பாழ்.!
மனைவி வந்தவள் மங்கலம் தந்தாள்
துணைவி யானள்தோ ழமையே—பிணை
அடிமையாய் ஆக்குதல் ஆணாதிக்கப் பாவமே.
ஆகும் அறியுவாய் ஆணே!
கணவன் என்பதால் கடமை என்பதாய்
நினைந்து மரியாதை செய்யலாம்—தனை
அடிமை ஆக்கித்தான் ஆகும் அதுவும்
உரிமை மதியா விலை.
தலைமை ஒன்றைத் தலையில் சுமந்துதன்
நிலைமை கொன்று நினையே---வலை
பட்டது மீனாய்தோற் றடிமை பட்டேநீ
எச்சை இலையென வீழாய்!
தொண்டன் உனதூய தொண்டை அடிமையாய்
கொண்டு தலைவன் உனையே—என்றும்தான்
நின்றுமே உன்னைப் படியாய்க் கிடத்தியே
வென்றும் உயர்வான் விதி.
பாச அடிமையும் மோசம் இலையேதான்
வேச அடிமையே தோசம்தான்---நீசனவன்
ஆசை மயக்கி அடிமையாக்கி அதனை
காசாக்கித் தானேதான் வாழ்வான்.
உன்னை மறந்தும் உறவைப் பிரிந்தும்தான்
பெண்ணைத் துறக்கவும் பண்ணுவான்—தன்தலை
எண்ணி அடிமையாக்கி எல்லாம் அவன்மாயை
ஒன்றில் சலவையும் செய்வான்.
வல்லார் அடிமையே வன்மை பழக்குமே
நல்லார் படிமைதான் நன்மையே—வெல்லாமை
அச்சம்தான் வீணடிமை செய்யும் அதனாலது
துச்சமே தூக்கி எறி!
மானமும் ஈனமும் மாய்த்துநீ மாண்டபின்
ஏனமே கெட்டுப்பின் கீழ்உன்னால்---வானமும்
நாணியே பொய்க்கும் அடிமையே பாவம்நீ
வீணேதான் வாழும் பிணம்.
உன்னை மதித்துமே தன்னை உயர்த்தவே
என்றும்நீ சேவை இயற்றியே!—கொன்று
அடிமையும் வென்றும் மடமைகள் நின்றே
உரிமை சமூகம் வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.
தொடரும்.........