சுதந்திரம் இனி நிரந்தரமில்லை
தர்மம் போற்றிய மண் மேலே
வன்மம் கொண்டு வந்தாரே
மர்மம் தாங்கிய போர் முறையில் எம்
மன்னர் மொத்தம் வீழ்ந்தாரே
பின்னர் கப்பம் கட்டி வாழ்ந்தாரே!!
வணிகம் என்ற பெயராலே
கலகம் செய்ய வந்தாரே
சூட்சும மரியா தெம்மக்கள்
சூழ்ச்சியில் சிக்கி தவித்தாரே
மீள்ச்சி கொள்ள துடித்தாரே!!
உதயம் தேடிய முன்னோர்கள்
உதிரம் சிந்திப் போராடி
தூக்கு மேடை ஏறினரே
வளங்கள் மொத்தம் இழந்துவிட்டு வெறும்
காகித சுதந்திரம் பெற்றோமே!!
வெள்ளையனை வெளியேற்றி
கொள்ளைக்கார கூட்ட மிங்கு
கொடூர செயல்கள் புரிந்ததுவே
கொலையும் திருட்டும் மேலோங்கி
கலையும் கவியும் தாழ்ந்ததுவே!!
வள்ளுவன் கொடுத்த திருக்குறளும்
கம்பன் தொகுத்த காப்பியமும் வெறும்
காட்சிப் பொருளாய் மாறியதே
அகத்தியன் அளித்த மருத்துவமும்
ஆற்று நீரில் அழிந்ததுவே!!
பச்சை வயலும் பண்பாடும்
இச்சை கொண்ட கயவர்களால்
நச்சு கலந்து நலிந்ததுவே
கூலி வேலை செய்வோரும்
கேலி கூத்தில் மயங்கினரே!!
சாதிகள் நூறு கொண்டாலும்
சமயம் வேறு என்றாலும்
சமத்துவம் போற்றி வாழ்ந்தோமே இன்று
தத்துவம் கொண்ட நெறியில்லை நம்
மகத்துவம் காக்கும் மனமில்லை!!
தொன்மை பெற்ற மொழிகளிலே
செம்மை பெற்ற தெம்மொழியே
திண்மை கொண்டு இம்மண்ணில்
தமிழில் பேச வழியில்லை அதன்
மேன்மை போற்ற நாதியில்லை!!
ஏழை வாழ்வு மாறவில்லை அவர்
வாழை இலை கேட்கவில்லை
காலையிலோ மாலையிலோ
ஒரு வேளை உணவேனும்
கொடுப்பதற்கு எவருமில்லை!!!
சொந்த இனம் காக்க வக்கில்லை
சேர்ந்து போராடும் குணமில்லை
சார்ந்து வாழும் பண்பில்லை
சொந்த பந்தம் தேவையில்லை இனியும்
நொந்து விட திராணியில்லை!!
ஓர் நாள் விடுமுறையில்
நெறிமுறை மாறாமல் தலைவர்
கல்லறை முன் நின்று நம்
தலைமுறை கொண்டாடும்
சுதந்திரம் மின்னியக்கத் தொலைகாட்சியில்!!!
மார்பில் ஒரு கொடியும்
மரபாய் தேசிய கீதமும்
மௌனமாய் சில நொடிகளும்
சுதந்திரத்தை போற்றவில்லை பெற்ற
சுதந்திரத்தை பேணி காக்கவில்லை
சுதந்திரம் இனி நிரந்தரமில்லை!!!!