ஊசித்துணி
சேலை போர்த்தும்
பொம்மைகளின் அணிவகுப்பில்,
பத்தோடு பதினொன்றாம்
பொம்மையாய் !!
அடுக்கி வைத்த
ஆடைகளின் அருகே,
மற்றொரு காட்சிப்பொருளாய் - நாங்கள்...
துணைவிக்கு துரோகம் செய்யும்
துரியோதனர்களே !
துணைவிக்கு சேலைத்தேடுகையில்
துணையாய் பாவிக்கும் கண்கள்,
தங்கைக்கு தாவணி தேடும்
அக்கனம் மட்டும்-தங்கையாய்
நினைக்க மறுப்பதேனோ ?
சதைத்தின்னும் கழுகுகளே !!
பார்வையிலேயே பதம் பார்த்திடும்
பருந்துகளே !!
உடை விற்கும்- எம்மை
உடல் விற்கும் வேசியென
நினைத்தாயோ ?
கண்களிலேயே- எங்கள்
ஆடை களைக்கும்
கயவர்கள் கவனத்திற்கு :
“இப்பொருள் விற்பனைக்கல்ல“
என்பதை மட்டும் நினைவில் கொள்க !!
- இவள்
விற்பனை பிரதிநிதி