அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

பூமியில் எங்கும்
களவு,கொலை
கற்பழிப்பு,வெடிகுண்டு
எனக் காலம் ஓடுது.
வாழ்க்கையின் நிதர்சனங்கள்
வாய் மூடி மௌனியாக்கி
வாழா வெட்டியாக்குது.
யாருமற்ற ஊரில்
அனாதைத் தெருவில்
ஆசுவாசப்பட மனம் ஏங்குது
அழகான வாழ்க்கை
ஆனந்தமாய் வாழ
மனம் பறக்குது.
காற்றைக் கிழித்து
உயரே எழும்பி
பூமியின் அவலமெல்லாம்
கண் வழிக் கரைந்தோட
ஏகாந்த வெளியிலே
உள்ளமும் பஞ்சாக
அங்கோர் புது உலகம்
கண்டு வியக்குது.
நினைத்தது நடந்ததென்று
மேகத்துள் முகம் புதைத்து
அண்டமே பவனி வர
ஆன்மா ஒன்று அலறுது.
என்ன வாழ்க்கை இது?
எதற்கும் பயனின்றி,
கண்மூடி ஒருமுகமாய்
மனம் ஒன்ற
பத்துத் திக்கிலும்
படிக்காத பாடமொன்று
நிழற்படமாய் விரியுது.
அழகான வாழ்க்கை
ஆனந்தமாய் வாழ,
சத்தத்தில் அமைதி செய்
கோபத்தில் சாந்தம் செய்
கலகத்தில் சமாதானம் செய்
வேற்றுமையில் ஒற்றுமை செய்
நேர்மையை வாழச் செய்
ஏழ்மையை அழியச் செய்
அதர்மத்திற்க்கே அநியாயம் செய்
வஞ்சகத்திற்கே சூது செய்
மானுடமே உணரச் செய்
பூமியை வாழச் செய்
தாய்நாட்டிற்கே பெருமை செய்!