+சொல்லடி சொல்லடி ராசாத்தி அடுத்தென்ன ஆச்சுடு கருவாச்சி+

தோழியரே! என் தோழியரே!
கதை யொன்று சொல்லுகிறேன் கேளுங்களே!

சொல்லடி! சொல்லடி ராசாத்தி!
உம் மச்சானின் கதைதானே என்னாச்சு?

அரும்பு மீசை சின்ன மச்சான்
கேலி பேசும் செல்ல மச்சான்
குறும்பு செய்யும் வாலு மச்சான்
மனசு லத்தான் இடம் பிடிச்சான்

ஆத்தாடி ஆத்தாடி அப்படியா!
அவன் குறும்புகள் ஒவ்வொன்றும் எப்படியோ?

பத்து வரைக்கும் படிச்ச மச்சான்
கெணத்து மேட்டுல எனப் புடிச்சான்
சொத்தா மனச எழுதி வச்சான்
முத்தங் கடனா கேட்டுத் தொலைச்சான்

என்னடி என்னடி கருங்குயிலே
கடன கொடுத்தியா இல்லையா சொல்மயிலே?

கடன நானும் கொடுத்த வேளை
மாமன் வந்து மொறச்சு நின்னார்
திட்டும் அங்கே மழையா பொழிய‌
திருட்டு மச்சான் பயத்தில் நெளிய‌

அடுத்தென்ன ஆச்சுடு கருவாச்சி
குடும்பத்தில் கல்யாணப் பேச்சு உருவாச்சா?

அது தானே நடக்கலை தோழிகளே!
மனச பழுதாக்கி விட்டுட்டார் மாமனாரே
மச்சான ரயிலேத்தி வெளியூரு போகச்சொன்னார்
நாட்டக் காப்பாத்தும் வேலையப் பார்க்கச்சொன்னார்

சொல்லடி சொல்லடி மயிலே நீ!
அவன் போனானோ உனைவிட்டு ரயிலேறி

கண்ணீரில் நானிங்கே தவிச் சிருக்க‌
பிரிவாலே தினந்தோறும் தனிச் சிருக்க‌
போனானே போனானே பாவி மச்சான்
என் ஆவியும் எடுத்துட்டு போனானே!

போனபின் நடந்தகதை சொல்லடியோ
உனைக்காண அவன் திரும்பி எப்பவந்தான்?

ஆனது அஞ்சாறு வருசந் தான்
கழிஞ்சது ஏக்கத்தில் பருவந் தான்
ஒரு நாளில் இடியெனச் செய்தியொன்று
என் உள்ளத்தில் இறங்கி கிழித்திட்டதே!

அய்யய்யோ அய்யய்யோ சொர்ணக்கிளி
அந்த சோகத்தையும் கொஞ்சம் பகிர்ந்துக்கடி..

எல்லைப் பகுதியின் சண்டை யிலே
எம் மச்சான எதிரியும் கொன்னுப்புட்டான்
தீயாக வந்த யிந்த சேதியிலே
என்னைத் தேத்தத்தான் ஊரிலொரு நாதியில்லே

சொகமான கதைகேட்க வந்தோமடி
மனச பிழிஞ்சுட்ட துன்னோட கதைதானடி

கலங்காதே என தருமை தோழியரே
மச்சான் தினமிரவில் கனவிலே வந்திடுவான்
நாட்டுக்காக உயிர் விட்ட கதையத்தானே
நூறுமுறை எனக் கவனும் சொல்லிடுவான்

வருந்துகிறோம் நாங்க வருந்திகிறோம்!
மருந்தாக உனக் கிருக்க முயற்சிக்கிறோம்!

வருத்தம் ஏனோ என் தோழியரே
பெருமைப் பட வேண்டிய செய்தியிதே
என்மச்சான் என் மனதில் நிறைஞ்சிருக்கான்
தாலாட்டி எனை தினமும் தூங்கவைப்பான்

வாழ்கையில் உன்னடுத்த அடியென்னடி
எதிர்காலம் பற்றி யுன் முடிவென்னடி

மனசுக்குள் ஒரே யொரு வருத்தந்தான்டி
கடனத்திருப்பி கொடுக்காம போயிட்டான் மச்சாந்தான்டி
அவன்வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பேன்
வாழ்வை அவன்நினைவாலே நானும் போக்கிடுவேன்

மனசுக்குள் உயர்ந்தயிடம் பிடித்தாயடி
உன் மனசாலே எங்களையும் கவர்ந்தாயடி

தாய் நாட்டைக் காப்பாற்ற உயிரவிட்ட‌
மச்சான் என்னுயிரில் மூச்சாக கலந்திட்டான்டி
அவனோட பெருந் தியாகத்தை நினைச்சுக்கிட்டே
வாழ்க்கை என்றென்றும் சுகமாக ஓடிடுமே..

உன்நினைப்ப உன்னோட விட்டுப்புட்டோம்
பார மனசோட நாங்களிப்போ புறப்பட்டுட்டோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Aug-14, 6:42 am)
பார்வை : 250

மேலே