அழகான வாழ்க்கை ஆனந்தமாய் பகுதி - 2

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ....பகுதி - 2
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாயாக உங்களை தாங்கி நிற்குமென்னை
ஆழ்துளையிட்டு இரத்தம் குடிக்கும் காட்டேரிகளே!
கரிசனம் காட்டும் தாயின் மீது
காறி உமிழ்வதுதான் உங்களின் கரிசனமா ?


பட்டாடை உடுத்திய பசுமரங்கள் நாங்கள்
வெள்ளாடை உடுத்தி வெறிச்சோடி நிற்கிறோம்
கிளைகள் வெட்டப்பட்டு அலங்கோலமாய்
வீதிகளில் நிற்கும் விதவைகளாய் நாங்கள்

பரந்த வெளிகளில் விரிந்த புல்வெளிகள் நாங்கள்
காண்போர்க்கு கண்கொள்ளா காட்சிகள் நாங்கள்
பின்னிப்படர்ந்த எங்கள் கூட்டுக்குடும்பத்தில்
விரித்த போர்வையில் விரிசல்களாய் பூமித்தாய்..

சிரித்துப்பேசி சுற்றித்திரியும் சிட்டுக்குருவிகள் நாங்கள்
அழகிய கோபுரங்களாய் அலைபேசிக் கோபுரங்கள்
அலைவீச்சில் அதிர்ந்து அதிர்ந்து உதிர்ந்து
போகின்றோம் ஒவ்வொரு உயிர்ப்பூக்களாய் ..

உழவனின் தொழிலுக்கு உதவியாக - மண்ணிலே
வீடுகட்டி மனமகிழ்ந்த மண்புழுக்கள் நாங்கள்
எங்களின் அழகான ஆனந்த வாழ்கையை
அடி உரமிட்டு அடியோடு அழித்தீர்கள்

ரீங்காரமிட்டு சுற்றித்திரியும் வண்டுகள் நாங்கள்
மகரந்தம் சேர்த்து மகசூல் பெருக்கும்
எங்களின் வட்டமிட்ட வாழ்வியல் சுழற்சியில்
திட்டமிட்ட சூழ்ச்சி அல்லவா ? பூச்சிக்கொல்லி

வயல்வெளிகளை வளம்கொழிக்க வைக்கும்
வற்றாத ஜீவநதிகள் நாங்கள் எங்களின் ஓடைகளில்
ஆலைக்கழிவுகளின் சாயம்பூசி அழகுபார்க்கிறார்கள்
மதச்சாயம் பூசிக்கொண்டு வாழும் மாக்கள்

விசுவாசமில்லா உங்களுக்கு சுவாசமாக நாங்கள்
சுகவாசிகளாய் சுற்றித்திரியும் தென்றல்காற்று நாங்கள்
உயிர்காக்கும் எங்களுக்குள் விசமேற்றி செல்கிறது
ஊர்தி கக்கும் கரும்புகைகள் கரியமில வாயுக்களாக ..

அழகான வாழ்கையை ஆனந்தமாய் வாழ - இறைவன்
இயற்கையெனும் எங்களையும் படைத்தான்
இயற்கையை வதைத்து இயந்திரம் படைக்கும் மாமனிதா !
விழித்துக்கொள் எங்களின் சீற்றங்களில் சிக்கிவிடாதே !

எச்சரிக்கிறோம் ! இனியும் விழிக்க மறந்தால் ...
உம் தலைமுறைக்கு விதிப்போம்! மரணதண்டனை !
மீண்டும் எச்சரிக்கிறோம் ! மறவாதே மரணதண்டனை !

படைப்பு - (அ.சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ . (25-Aug-14, 1:47 pm)
பார்வை : 473

மேலே