கனவுக்கூடாரங்களும் காட்சிப்பிழைகளும்

ஓர் முன்னிரவில்
இளைப்பாரும் இமைகள்
யாசிக்கும் ஏற்பாடுகளில்
எனக்கான உலகை நானே
இரட்சிப்பேன்...

இது எனக்கானது மட்டும்
ஆம்! அதோ அந்த
அன்னப் பறவைகளின்
பாலாகவும்! அணில் பிள்ளைகளின்
அசைபொருளாகவும்! நானே
மாறுவேன்...

பள்ளங்களில் வழுக்கி விழுவதும்
நானே! அங்கே நின்று
தாங்கி கொள்பவனும்
நானே! என் வேதாந்தங்களின்
விமர்சனங்கள் விலை
மதிப்பற்றது!...

ஏவாளின் பிரதியாக அவளைக்
காண்பேன்! ஆதாமின்
அச்சாக நானே! ஏணிப்படி
இல்லாத சுவனங்களை
எட்டி பிடித்து
இறுமாப்படைவேன்....

சில பின் குறிப்புகளுக்காகா
புரியாத வரிகளை
கோர்த்து புதுக்கவிதை
ஒன்றையும் எழுதிவைத்து
புல்லரிப்பேன்....

கலர் கலர் கதவுகளில்
என் காலடித்தடத்தை
கைப்பிடியாக வைப்பேன்!!
ஆம் நான் கர்விதான்
கர்த்தாவும் கூட...

வானவில்லின் ஒரு பகுதி
ஒடித்து வலக்கை வலு
சேர்ப்பேன்! விண்மீன்களின்
விலைபேசி என்கண்ணாடி
கடை விரிப்பேன்....

இலக்கியங்கள் கோரும்
ஒவ்வொரு திணைகளையும்
இரும்பு பெட்டிக்குள் இறுத்தி!!
இந்த கவிஞர்களையெல்லாம்
களையெடுக்கச் செய்வேன்....

ஒலிம்பியாவில் ஒருமுறையும்!
பாபிலோனில் ஒருமுறையும்!
பிரமிடுகளுக்குள் பலமுறையும்!
கொலிசியத்தில் சிலமுறையும்!
கண்ணாமூச்சியாடி களைப்படைவேன்....

ஏகாந்தம் அசைபோடும்
அத்தனை ஆர்ப்பரிப்புகளையும்
அசமந்தங்களையும்
அள்ளி என்
கைக்குட்டைக்குள் அடைத்து
வருவேன்....

இமைகள் இறுக்கிவைத்தால்
நானும் இறைவன்
ஆகிப்போகிறேனா???
கனவுக்கூடாரங்களும் காட்சிப்பிழைகளும்
காதல் புரிகின்றனவா???
இரவு வரட்டும் இமைமூடட்டும்......

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (26-Aug-14, 10:33 am)
பார்வை : 104

மேலே