அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அண்ணன்களே அக்காக்களே...
அன்றொரு நாள்
அதே நிலவில்
நாங்கள் ஹவனா
வீதிகளில்
அடிப் பந்தாட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்.
அப்போது
அவர்கள் வந்து
எங்கள் அப்பாவை
அடித்தே கொன்றனர்.!
அதுவரை இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.
பின்னாட்களில் நாங்கள்...
சாவ் பள்ளதாக்கில்
கால் பந்தாட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்.
அவர்கள் வந்து
எங்கள் சின்ன அக்காளை
ஆயுதம் தேடுதலில்
அம்மணப் படுத்தினர்!
அதுவரை இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.
அப்புறம் ஒரு நாள்,
திரிபோலி கடற்கரையில்,..
ஓடிப்பிடித்து
ஆடிக் கொண்டிருந்தோம்.
தீடிரென இரைச்சல்கள்..
தாக்கிய குண்டொன்றில்
எங்கள் செல்லமாமன்!
நிலைகுலைந்து செத்தான்.!
அதுவரை இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.
மறுபடி ஒருநாள்,
மார்ச்மழையில்...
ஃபல்லுஜாவில் கப்பல்
விட்டுக் கொண்டிருந்தோம்.
தடதடவென பெரியஜீப்.!
பூட்ஸ்கால்களோடு.!!
எங்கள் அம்மாவை...
வேண்டாம்.விட்டுவிடுங்கள்.
அப்போதும் இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.
கடைசியாக....
நேற்றுபகல் காஸாகரையில்...
விளையாடவில்லை.!
படித்துக்
கொண்டுதான் இருந்தோம்.
இம்முறை
அவர்கள் வரவில்லை.!
அவர்கள்
கூட்டாளிகள் வந்தனர்.
எங்கள் மொத்தத்தையும்
முடித்தனர்.
மிஞ்சியவர் இருவரே.
எங்களுக்கும் எஞ்சியது...
உயிரன்றி வேறில்லை.
உறவில்லை.நாடில்லை.
உடலில் சில உறுப்பில்லை.
அதனால்தான் சொல்கிறோம்
அண்ணன்களே,அக்காக்களே
அழகான வாழ்க்கைதான்!
ஆனந்தமாய் வாழ்வுதான்.!!
ஆனால்...
அவர்கள் வரும்வரைதான்.
--
பி.கு :
ஹவானா - கியுபா தலைநகரம்
அடிபந்தாட்டம் - baseball
சாவ் பள்ளத்தாக்கு - அவர்கள் வியட்நாமில் ஊடுறிவிய இடம்.
திரிபோலி - லிபியா தலைநகரம்
ஃபல்லுஜா - அவர்கள் ஈராக்கில் அடிமட்டமாக்கிய நகரம் .
காஸாகரை -சமீப ரத்தக்கறை.