மணியனின் முத்தம்

கொடுத்தால் பெறுவது
பெற்றுக் கொடுப்பது
இயற்கை தந்த
இயல்பான சித்தம்
இனிக்கும் முத்தம் . . . . . .

சடுகுடு ஆடி
சடுதியில் வென்று
சான்றாக வழங்கும்
சுழல் கோப்பைக்கு
சுடச்சுட தரும்
சூடான முத்தம் . . . . .

எண்ணச் சிறகுகள்
எட்டுத் திக்கும்
எங்கெங்கோ திரிந்து
ஏட்டில் குவிந்து
எழுதிய கவிதைக்கு
ஏகாந்த முத்தம் . . . . . .

படித்து முடித்து
பட்டம் பெற்று
பாட்டாளி ஆகி
பணிகள் செய்ததன்
பலனாய் கிட்டிய
பணத்துக்குத் தரும்
பரவச முத்தம் . . . . . . .

மறைத்து வைத்த
மங்கையின் நிழற்படம்
மற்றவர் பாராமல்
மின்னலாய் எடுத்து
முன்னால் பிடித்து
முறுவலுடன் தரும்
முதல் முத்தம் . . . . . .

இதனுடன் ஆயிற்று
இருபத்தி எட்டு
இதுவே போதுமா
இன்னும் வேண்டுமா. . .
இல்லாளை இழுத்து
இம்சிக்கும் சந்தம்
இதை விடவேது சுகந்தம் . . . . .

அலுவலகம் செல்லும்
அவசர வேளை
அடுப்பங்கரை சென்று
அரை அணைப்புடன்
அள்ளித் தெளிக்கும்
அவசர முத்தம் . . . . . . . .

அன்ன வாசம்
அள்ளி வீசும்
அன்புக் குழந்தையை
அணைத்துக் கொடுத்தால்
ஆனந்த முத்தம் . . . . . .

சத்தமின்றி வந்தாலும்
முத்தம் முத்தமே . . .
சித்தம் குளிர்ந்திடும்
மொத்தமாய் நித்தமே . . . .
மானுட வாழ்வின்
முத்தத்தின் சத்தம்
மயானம் வரையிலும்
மலர்ந்து சிறக்குமே . . . .

ஒரு நாள்
ஒரு பொழுதாயினும்
ஓய்வின்றி பெற்றால்
ஓங்குமே வாழ்க்கை. . . .
ஓயாமல் கொடுத்தாலும்
ஒவ்வாமை தாராது . . . . . . .



















*-*-*-* *-*-* *-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (26-Aug-14, 7:45 pm)
பார்வை : 81

மேலே