அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
![](https://eluthu.com/images/loading.gif)
விமானப்பறவையில்
விருப்பமில்லாது
விடைபெறுகிறேன்
முதல் முறையாய்
என் மண்ணைவிட்டு ...
தடதடக்கும் சத்தத்தின் ஊடே
தடுமாற்றத்துடன்
பின்னோக்கி பயணிக்கிறது
என் மனம் ...
பரபரப்பான அதிகாலைப் பொழுதில்
பன்னிரெண்டு கண்கள்
பரிதவிப்புடன் திரிகிறது
எனை வழியனுப்ப ...
ஆனால் ...அதில்
அந்த இருஜோடி கண்கள் மட்டும்
அடிக்கடி சந்தித்து இதயம்தொட்டு
பின் ...மீள்கிறது ...
மீளும் கண்கள்
மீட்டும் ராகம்
யாருக்குப் புரியும்
மனைவியின் உணர்வை
மனம் மட்டுமே அறியும் ...
அழகான வாழ்க்கை
ஆனந்தமானது ...
அற்புதமானது ...
ஆனால் சிலநேரங்களில் ?
விதி வலியதுதான்
விரல் சொடுக்கும் நேரத்தில்
விருப்பங்கள் அனைத்தையும்
தலைகீழாக்கும்
"தந்திரம் "
அதற்குத் தெரியும் ...
அவ்வாறே நிகழ்ந்தது
அப்பொழுதும் ..
என் வாழ்வையே
எதிர்த் திசையில் புரட்டிப் போட்ட
அந்த நொடிகளின் அவலம்...
அது தந்த வலியினை
அறியுமுன்னரே
எங்களை விட்டு பிரிந்த
என் தந்தையின்
நினைவுகளையும் சுமந்து
நிகழ்காலத்தில்
நடைபயில முயன்ற பொழுதது...
வேடிக்கையான வாழ்வில்
வேதனையை மட்டும்
எங்களுக்குப் பரிசளித்த
எல்லையற்ற இறைவனின்
திருநாமத்தை அப்பொழுதுகளில்
எத்தனைமுறை சபித்தேனோ
எனக்கு நினைவில்லை ...
நெஞ்சுக்கூடு முழுவதும் வலிசுமந்து
உயிர் பிரியாதவாறு இழுத்தணைத்து
இதழால் மட்டுமே சிரித்துக்கொண்டு
இருண்ட உலகத்தினுள் எங்கெங்கும்
எனைத்தேடித் தொலைந்தேன் ...
எதிர்த்திசைக் காற்றில்
எவ்வளவுதான் மிதித்தாலும்
முன்னேறத் தடுமாறும்
மிதிவண்டியாய்...
அப்பொழுதுகளில் ...நான் ?
வாழ்வில் எளிதாய் கிடைத்த
வலிகளின் நரம்புகளை உருவி
என் வீணையின் நரம்புகளாக்கி
எல்லா ராகங்களையும்
என்னுள்ளே வாசிப்பேன்
எனக்கு மட்டும் கேட்குமாறு ...
அடிபட்டு ...அடிபட்டு ...
அனுபவக்கூட்டில்
நானே முட்டையிட்டு
நானே குஞ்சாகி
நானே பறந்தேன்
புது ..வானில் ..
கூட்டை கடந்து
பல தூரம் பயணிக்கும்
பறவைபோல்
நாட்டை கடந்து
நான் பயணிக்க விளைந்தேன்
புதிய பாதையில் நெடுந்தூரம் ...
பாதைபற்றி பயமில்லை
பட்டவலி என்னுள்ளே
பாவப்பட்ட மனதுமட்டும்
பாறையாய் இறுக்கத்தில் ...
சில நேரங்களில்
சிட்டுக்குருவிகளின் சிணுங்கலும்
சிறுமழையின் சிதறலும்
சில்வண்டின் ராகமும்
சிறிது ...சிறிதாய் என்னுள்ளே
என்னை மீட்டுக்கொள்ளும் ..
நிலையில்லா பொருள்தேடி
நிம்மதி தொலைத்து
நெடுந்தூரம் பயணிக்கிறேன்
நெடிய உலகில் ..எப்போதும்
என்பதே நிதர்சனம் ..
என் தந்தை விட்டுச் சென்ற
உணர்வுகளுக்கு உயிரூட்ட
என் உடலைமட்டும் எடுத்துக்கொண்டு
என் உயிரை விட்டுச் செல்கிறேன்
வெகு பத்திரமாய் ...
வாழ்வெனும் கடலை கடக்க
வானத்தையே கடக்கிறேன்
புது வாழ்வுதேடி ...
முதுமை கண்ட தாய்
முல்லைப் பூப்போன்ற தங்கை
முத்தாய்ப்பான தம்பிகளென
முகம் தொலைத்த குடும்பத்தின்
முகவரியை புதுப்பிக்க
முடிவில்லா ஒரு பயணம் ..
குறைகின்ற பொருள் தேடி
குறையாத அன்புகொண்ட
நெஞ்சங்களுக்காக
என் பயணம் ..
முதல் முறை நடுக்கத்தில்
என்.. உடல்
முத்தமிட்டுப் பிரிந்த
என் உதட்டின் சூடு
நான் வரும் வரை
வெப்பச் சலனங்களை
எங்களுக்குள் ஒளித்துவைக்குமா
என்ற ஏக்கத்தில் அந்த
இரண்டு ஜோடி கண்கள் விடைபெற்றன
இதயம் உடைந்தவாறு ..
அழகான வாழ்வு
ஆரம்பமானது
அற்புதமானது
அது தந்த வலி ..எப்போதும்
எனைச் செதுக்கும் சிற்பியென்பது
எனக்குத் தெரியும் ..
என் சந்ததிகளுக்கு
கனிகள் சேர்த்துவைக்காவிடிலும்
நிழல் தரும் மரங்களையாவது
நட்டுவைப்பேனென்ற நம்பிக்கையில்
புதிய உலகு நோக்கி
புதிய பயணமாய்
என் தேடல் ..