எனக்கு மட்டும் ஏன்

என் குடும்பத்தின்
வரலாற்றினை
புரட்டிப் பார்த்தேன் !
என் தாத்தாவையும்
ஓடிச் சென்று
துரத்திக் கேட்டேன் !
என்னைப் போல
கவிதை எழுதும்
கலையைக் கொண்டான் !
என் குடும்பதிலே
என்னைத் தவிர
யாரும் இல்லையாம் !
எனக்கு மட்டும்
ஏன்தான் இந்தத்
தொழிலோ என்று !
மனக்கணக்கு
போட்டபடியே
கேட்கிறேன் இன்று !
எந்தன் பிறப்பின்
முன்ஜென்மத்தில்
கம்பன் கையில் !
செந்தமி ழாடும்
எழுத்தாணியாகப்
பிறப்பெடுத்தேனோ ?
பாரதி தலையின்
பாகை யாகவே
நானும் பிறந்து !
பாரதம் முழுதும்
அவனுடன் சேர்ந்து
உலவியிருப்பேனோ?
கண்ண தாசன்
எழுதிப் பின்பு
கிழித்துப் போட்ட !
வண்ணக் காகித
மாகமுன் வாழ்வில்
அவதரித்தேனோ ?
வாலிக்கு முதலாய்
பாட்டு வந்ததும்
அவரைத் திட்டிக்
கேலி செய்திட்ட
*மனிதனாய் நானும்
இருந்திருப்பேனோ ?
வைரமுத்துவும்
வைராக்கியதோடு
எழுதி முடித்த
பைரசப் பாட்டின்
ஒற்றுப் பிழையாய்ப்
பிறந்திருப்பேனோ ?
நமது எழுத்திலே
மரபுமா மணியாம்
எசேக்கியல் அப்பர்
தமது கரத்தால்
கிள்ளிய பூவாய்
வளர்ந்திருப்பேனோ ?
அண்ணன் சந்தோசு
காலடி பட்டச்
சருகாய்ப் பிறந்து
மண்ணிடை மக்கி
அதற்கு உரமாய்
மாறி இருப்பேனோ ?
என்னுடை கேள்விக்கு
பதில் தெரிந்தால்
யாரேனும் சொல்லுங்கள் - இல்லை
சின்னப் பயல்தான்
கத்துகிறான் என்று
மெதுவாய் செல்லுங்கள் !
-விவேக்பாரதி
_____________________________________________________________________________________________________
*மனிதனாய் = கவிஞர் வாலி அவரது சிறு வயதில் முதன் முதலில் தான் எழுதியக் கவிதை ஒன்றை தனது ஆசிரியரிடம் காட்டிய பொழுது அவரது ஆசிரியர் " உனது பெயர் ரெங்கராஜன் தானே எதற்கு வாலி என்று பெயரிட்டு எழுதுகிறாய் ? மாற்றிக்கொள் ..." என்று கூற அதற்கு கவிஞர் வாலி
" வால்லிலாமல் வாலியாகக் கூடாதா ?
காலில்லாமல் கடிகாரம் ஓடாதா ?" என்று எழுதித் தந்தவுடன் அந்த ஆசிரியர் வெட்கி தலை குனித்தார். இந்த செய்தியை எனது நண்பன் சொல்லிக் கேட்டதும் நான் எழுதிய கவிதையில் சேர்த்தேன்!